பதற்ற நிலையைக் கட்டுப்படுத்த நாடுடெங்கும் பொலிஸ் ஊரடங்கு

குழப்பம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்ைக

நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

நேற்றிரவு 9.00மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை 4 மணிவரை நீடித்தது.என்றாலும் நாடு முழுவதும் நிலைமை பூரண கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், வடமேல் மாகாணத்தில் நேற்று அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கம்பஹா மாவட்டத்தில் நடைமுறைக்கு வந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் நீக்கப்படுமென பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, குளியாபிட்டி பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலை மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக வடமேல் மாகாணம் முழுவதும் உடனடியாக

அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குளியாப்பிட்டி, ஹெட்பொல மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நேற்றும் நேற்று முன்தினம் இரவும் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் தலையீட்டை அடுத்து முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

நேற்று முன்தின் சிலாபம் பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து சிலாபம் பொலிஸ் பிரிவில் நண்பகல் முதல் நேற்றுக் காலை (13) 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நள்ளிரவு வேளையிலிருந்து காலை 4 மணிவரை குளியாபிட்டி, தும்மலசூரிய, பிங்கிரிய ஆகிய பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு நேற்றுக் காலை நீக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றுப் பிற்பகல் 2.30 அளவில் அந்தப் பகுதிகளில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாகவும் அதில் ஹெட்டிபொலவும் உள்ளடக்கப்பட்டது. பிற்பகல் 3. மணி முதல் ரஸ்நாயக்கபுர, கொபேகன ஆகிய பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் மாலை 5.30இற்கு வடமேல் மாகாணம் முழுவதும் மறு அறிவித்தல்வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இரவு 7.30முதல் இன்று காலை 6 மணிவரை கம்பஹா பொலிஸ் பிரிவில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில் :-

குளியாபிட்டி ஹெட்டிபொல வீதியிலுள்ள மூன்று கடைகளுக்கு கற்களினால் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தப்பட்டசம்பவம் நேற்று முன்தினம் மாலை பதிவாகியிருந்தது.

இதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

அதேபோன்று (இன்றும்) நேற்றைய தினமும் குளியாப்பிட்டி, ஹெட்டிபொலயிலுள்ள சில பகுதிகளிலுள்ள கடைகள் கற்கள் வீசப்பட்டு சேதமாக்கப்பட்டன.

இதனை அடுத்து 6 பொலிஸ் பிரிவுக்கு மாத்திரம் ஆரம்பமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

எனினும், கடைகளுக்கு தாக்குதல் நடத்துதல் போன்ற சம்பவங்கள் மேலும் இடம்பெறாமல் இருக்கும் பொருட்டு மறுஅறிவித்தல் வரை அமுலுக்கு வரும் வகையில் வட மேல் மாகாணம் முழுவதிற்கும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்துப்பட்டுள்ளது. குளியாப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற சிறுசிறு அசம்பாவிதங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு பொய் வதந்திகள் பரப்பப்பட்டன.

சொத்துச் சேதங்களைத் தவிர எந்தவொரு நபரும் இந்தச் சம்பவத்தில் காயமடையவில்லை என்றார்.

இதேவேளை, சமூக ஊடகத்தின் ஊடாக வீணான பதிவேற்றத்தை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அப்துல் ஹமீத் மொஹம்மட் ஹஸ்மத் என்பவர் சிலாபம் மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் அவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேநேரம், ஆங்காங்கே அசம்பாவிதங்களை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் காணப்படும் அமைதியையும் சமாதானத்தையும் குலைக்கும் வகையிலோ மக்களின் அன்றாட வாழ்க்கை நிலைமை பாதிக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என்று பாதுகாப்பு தரப்பினர் பொது மக்களிடம் பகிரங்க வேண்டு கோளை விடுத்துள்ளனர்.

அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் பட்சத்தில் பாதுகாப்பு பாடையினரும் பொலிஸாரும் முன்னெடுத்து வரும் தேடுதல் நடவடிக்கைகள் பாரிய பாதிப்பு ஏற்படும் அதேசமயம், சம்பவங்கள் இடம்பெறும் பிரதேசங்களில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பொருட்டு மேலதிகமாகப் படையினர் அனுப்பி வைக்கும் நிலை ஏற்படுவதாக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை நம்பி ஏமாறுவதை விட்டுவிட்டு பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பொலிஸார் மீது நம்பிக்கை வைக்குமாறும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தினால் விடுக்கப்படும் உத்தியோகப்பூர்வ அறித்தலை மாத்திரம் கவனத்திற் கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இடம்பெற்றது. இதன் போது பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன மேலும் விளக்கமளிக்கையில் :-

உயிர்த்த ஞாயிறு அன்று தாக்குதல் நடத்தப்பட்டதிலிருந்து முப்படையினார், பொலிஸார், பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் புலனாய்வுத்துறையினர் இணைந்து பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதுடன் அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் உதவியாளர்கள் பாடையினரின் கூட்டு செயற்பாடுகளின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீருடை அணிந்து பாதுகாப்பு தரப்பினருக்கு மேலதிகமாக சிவில் உடைகளிலும் புலனாய்வு படையினர் நாடு முழுவதிலும் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன். முகநூலையோ, சமூக ஊடகங்களிலோ அல்லது உங்களுக்கு கிடைக்கும் குறுஞ் செய்திகளை புலனாய்வு தகவலாக நினைத்து வீணான அச்சம் கொள்ளாமல் செயற்படுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

லக்ஷ்மி பரசுராமன், ஸாதிக் ஷிஹான்

Tue, 05/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை