வெனிசுவேலாவில் ஆர்ப்பாட்டங்கள் உக்கிரம்: பெண் ஒருவர் உயிரிழப்பு

வெனிசுவேல தலைநகர் கரகாஸில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மற்றும் அரச ஆதரவு படைகளிடையே இடம்பெற்ற மோதலில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவம் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மற்றும் தண்ணீர் பீச்சியடித்தது. இதில் 27 வயது பெண்ணின் மரணத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோ குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி நிகோலஸ் மடுரோவை அதிகாரத்தில் இருந்து விலக கட்டாயப்படுத்தி தீவிர ஆர்ப்பாட்டங்களுக்கு குவைடோ அழைப்பு விடுத்துள்ளார். அரசாங்க ஊழியர்கள் பொது வேலை நிறுத்தம் ஒன்றை முன்னெடுப்பதற்கும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 50க்கும் அதிகமான நாடுகள் குவைடோவை வெனிசுவேல இடைக்கால ஜனாதிபதியாக அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் மடுரோவுக்கு சீனா, ரஷ்யா மற்றும் நாட்டின் இராணுவம் ஆதரவு வழங்குகின்றன.

மடுரோ நாட்டை விட்டு தப்பியோட தயாராவதாக கூறப்படும் செய்தியை மறுத்திருக்கும் அவர், அமெரிக்கா ஆட்சி கவிழ்ப்பு சதிப்புரட்சி ஒன்றுக்கு முயற்சிப்பதாக குறிப்பிடுகிறார். இதில் தொடர்புபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை தலைநகரில் அரச ஆதரவு மற்றும் எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பத்தில் அமைதியாக இடம்பெற்றுள்ளன. எனினும் அரச எதிர்ப்பாளர்களின் பலம்கொண்ட அல்டமிரா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பேரணியின்போது பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது 46 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் அத்துமீற செயற்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.

அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் வெனிசுவேலா பொருளாதார நெருக்கடி, தொடர் மின்வெட்டு, மற்றும் பரவலான உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது.

Fri, 05/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை