சவூதி எண்ணெய் கப்பல்கள் மீது வளைகுடாவில் ‘நாசகார’தாக்குதல்

சவூதி அரேபியாவின் இரு எண்ணெய் கப்பல்கள் ஐக்கிய அரபு இராச்சிய கடற்கரைக்கு அப்பால் தாக்குதல் ஒன்றுக்கு இலக்கானதாக அந்நாட்டு எரிசக்தி அமைச்சர் காலித் அல் பாலிஹ் குறிப்பிட்டுள்ளார்.

புஜைராஹ் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் கப்பல்களுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல நாடுகளைச் சேர்ந்த நான்கு கப்பல்கள் இவ்வாறான தாக்குதல்களுக்கு இலக்காகி இருப்பதாக ஐக்கிய அரபு இராச்சியம் குறிப்பிட்டுள்ளது. இதில் எவருக்கும் காயமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் கவலைக்குரியது மற்றும் ஆபத்தானது என்று ஈரான் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டிருப்பதோடு முழுமையான விசாரணை ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

உலக எண்ணெய் நுகர்வில் சுமார் ஐந்தில் ஒரு பங்கை கொண்டிருக்கும் இந்த பகுதியில் தற்போது பதற்றம் அதிகரித்துள்ளது.

ஈரானின் அச்சுறுத்தலுக்கு பதில் நடவடிக்கை எனக் கூறி அமெரிக்கா பிராந்தியத்தில் மேலதிக போர் கப்பல்களை நிறுத்தியுள்ளது. இந்தக் குற்றசாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது.

“அரேபிய வளைகுடாவிற்குள் நுழையும் வழியில் புஜைரா கடற்கரைக்கு அப்பால் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வர்த்தக வலயத்திற்குள் இரு சவூதி எண்ணெய் கப்பல்கள் நாசவேலை தாக்குதல்களுக்கு முகம்கொடுத்துள்ளன” என்று சவூதி எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இதில் ஒரு கப்பல் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சவூதி அரம்கோ வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதற்கு ராஸ் நூர் துறைமுகத்தில் இருந்து சவூதி மசகு எண்ணெயை ஏற்றிக்கொண்டு பயணித்தது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவருக்கும் காயம் ஏற்படாத போதும் இரு கப்பல்களுக்கும் குறிப்பிடும்படியான சேதம் ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“எண்ணெய் கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் கடல் பயணத்திற்கான பாதுகாப்பிற்கு சர்வதேச சமூகம் கூட்டுப் பொறுப்பு வகிக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

புஜ்ராஹ் துறைமுகத்தில் வெடிப்பு நிகழ்ந்ததாக வெளியான ஊடகச் செய்திகளை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.

அந்த பகுதிக்கு பயணிக்கும்போது அவதானத்துடன் இருக்கும்படி அமெரிக்க கடல் வழி அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனினும் இந்த தாக்குதல் குறித்து யார் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை.

வளைகுடாவின் அதிக எண்ணெய் ஏற்றுமதிகள் செல்லும் ஹார்முஸ் நீரிணையை கடக்கும் அரேபியக் கடலில் அமைந்திருக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒரே துறைமுகமாக புஜைராஹ் உள்ளது.

இந்த ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் தொடர்ச்சியாக விடுக்கும் அச்சுறுத்தல் அமெரிக்காவுடனான மோதல் போக்கிற்கு இட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 05/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை