அவசரகால சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பதற்கு அனுமதிக்கமாட்டோம்

விதிமுறைகள் மிக மோசமாக தயாரிக்கப்பட்டுள்ளன

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பதற்கு அனுமதிக்க முயாதென்றும், அதில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை சவாலுக்குட்படுத்த நீதிமன்றத்தை விரைவில் நாடவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டில் நேற்று (02) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அவசரகால சட்டம் நடைமுறை தொடர்ந்தும் நீடிப்பது தொடர்பில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவசரகாலச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது, எவருமே அதற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. வழமையாக எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்கள் விடுதலை முன்னணி கட்சியினர் கூட அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. நாட்டில் நடைபெற்ற சூழ்நிலை காரணமாக அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

ஆனால், அவசரகால விதிமுறைகள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. அந்த விதிமுறைகளைப் பார்த்த போது, அவை மிக மோசமாக தயாரிக்கப்பட்டுள்ளன. மக்களின் சுதந்திரங்கள் இலகுவாகப் பறிக்கக் கூடியதாகவும், மக்களுக்கு எதிராக அடக்குமுறையை உபயோகிக்க இலகுவாகவும், தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த விதிகளை தொடர்ந்தும் இருப்பதற்கு அனுமதிக்க முடியாது. அந்த விதிகளை மாற்ற வேண்டும்.

அல்லது அந்த விதிகளை மாற்றுவதற்கு சவாலுக்குட்படுத்துவதற்காக நீதிமன்றத்திற்குச் செல்லும் நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் சவாலுக்குட்படுத்தப்படும். ஆனால், அதற்கு மேலாக ஒரு மாத காலத்திற்கு மேலாக அவசரகாலச்சட்டம் நீடிப்புக்கு வருகின்ற போது, அதுகுறித்து மேலும் ஆலோசிக்கப்படும். தேவையற்று அவசரகாலச் சட்ட நிலமை நீடிப்பதற்கு அனுமதிக்கமாட்டோம் என்றார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

 

Fri, 05/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை