அக்கரைப்பற்று ரிபிள்பி அணி சம்பியன்

ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று ரிபிள்பிஅணி சம்பியானது.

'விளையாட்டினூடாக பாராபட்சமற்ற சமூக ஒற்றுமையை மேம்படுத்தல்' எனும் எண்ணக்கருவுடன் ஒழுங்கு செய்யப்பட்ட 32 அணிகள் பங்கேற்ற நொக்கவுட் முறையிலான இச்சுற்றுப்போட்டி தொடரின் இறுதிப்போட்டி ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் கடந்த (20) நடைபெற்றது.

இப்போட்டியில் அக்கரைப்பற்று ஜங்ஸ்டார் விளையாட்டுக்கழகத்தை எதிர்கொண்ட ரிபிள்பி அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அக்கரைப்பற்று ரிபிள்பி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ஆடுகளத்தில் நுழைந்த ரிபிள்பி அணியின் ஆரம்பதுடுப்பாட்ட வீரர்களின் அதிரடியான துடுப்பாட்டத்தின் மூலம் 10 ஓவர்கள் நிறைவில் 140 ஓட்டங்களை குவித்தனர்.

கடினமான இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களத்தில் குதித்த அக்கரைப்பற்று ஜங்ஸ்டார் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் வேகமாக ஓட்டங்களை பெற முனைந்த போதிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆயினும் பின்வந்த வீரர்கள் நிதானமாக துடுப்பெடுத்தாடிய போதிலும் 62 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.

இப்போட்டித்தொடரின் தொடர் ஆட்ட நாயகனாக ஜங்ஸ்டார் அணி வீரர் ச.நோவிராகவன் தெரிவு செய்யப்பட்டதுடன் ஆட்ட நாயகன் விருதை ரிபிள்பி அணி வீரர் றுஸ்கி தட்டிச் சென்றார்.

இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கான நினைவுச்சின்னங்கள் மற்றும் பணப்பரிசுக்கான காசோலை என்பன அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டதுடன் சம்பியன் கிண்ணத்தினையும் அதிதிகள் இணைந்து வழங்கி வைத்தனர். தமது கழக வளர்ச்சிக்காக பல்வேறு உதவியினை வழங்கி வரும் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அதிதிகள் மற்றும் கழகத்தில் சிறந்து விளங்கிய உறுப்பினர்களுக்கும் நினைவுச்சின்னங்களும் உதயம் விளையாட்டு கழகத்தினரால் விசேடமாக வழங்கி வைக்கப்பட்டன.

உதயம் விளையாட்டு கழகத்தின் தலைவரும் ஆலையடிவேம்பு பிரதேச சபை செயலாளருமான ஆர்.சுரேஸ்ராம் தலைமையில் இடம்பெற்ற இறுதிச்சுற்றுப்போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக பிரதேச சபை தவிசாளர் க.பேரின்பராசா, பிரதேச சபை உறுப்பினர் த.கிறோஜதரன், விளையாட்டு உத்தியோகத்தர் அ.ரிசாந்தன், ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலய தலைவர் ஆர்.ஜெகநாதன், ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய அதிபர் சி.சுரேஸ் ஸ்ரீபன்சன், உதயம் கழக உபசெயலாளர் என்.திவாகரன்,ஆலோசகர்களான சட்டத்தரணி வி.பிரசாந்தன் எஸ்.பிரதீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வாச்சிக்குடா விஷேட நிருபர்

Wed, 05/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை