மக்கள் ஆணை இருக்கும் வரை அரசாங்கம் தொடர்ந்து இருக்கும்

2015ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரமே தற்போதைய அரசாங்கம் ஆட்சி புரிகிறது. எமக்கான மக்கள் ஆணை இருக்கும் வரை இந்த அரசாங்கம் தொடரும். அதுவரை ஆட்சியை கவிழ்க்கவோ, பிரச்சினைகளை ஏற்படுத்தவோ அவசியமில்லை என்றும் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அத்துடன், குடும்பங்களின் ஆதிக்கமும், குடும்ப நபர்களின் ஆதிக்கமும் இல்லாது தகுதிகள், திறமைகளுக்கு முன்னுரிமையளிக்கும் அரசாட்சியை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்றும் அவர் கூறினார்.

அமரபுர நிக்காயவின் மகாநாயக்க தேரர் கோடுகொட தம்மாவாசவிடம் ஆசிகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எமக்கு மக்கள் ஆணையொன்று உள்ளது. குறித்த மக்கள் ஆணை உள்ளவரை இந்த அரசாங்கம் பதவியிலிருக்கும். 2015ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகௌரவப்படுத்த நாங்கள் தயார் இல்லை. என்றாலும், இந்த சந்தர்ப்பத்தை விசேடதொரு தருணமாகவே பார்க்கின்றேன். கட்சி பேதங்களை மறந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்க நாம் ஒன்றிணைய வேண்டுமென்பதுடன் நாட்டின் சமாதானத்தை உறுதிப்படுத்தவும் தலைமைத்துவம் வழங்க வேண்டும்.

எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. ஒக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தலுக்கான அழைப்பை விடுக்க வேண்டும். அத்தருணத்தில் ஆட்சியைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களுக்கு கிடைக்கும்.

ஆகவே, அதுவரை ஆட்சியை மாற்றவும், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும், பிரச்சினைகளைத் தோற்றுவிக்கவும் அவசியமில்லை.

என்றாலும், நாட்டுக்கும் தேசிய பாதுகாப்புக்கும் முன்னுரிமையளிக்க வேண்டும்.

குடும்ப ஆதிக்கம் இல்லாது குடும்பங்களில் இருந்து வருபவர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்காது தகுதிகள், திறமைகளுக்கு முன்னுரிமையளிக்கும் அரசாட்சியை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Tue, 05/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை