முஸ்லிம் சகோதரத்துவத்தை பயங்கரவாத குழுவில் சேர்க்க அமெரிக்கா நடவடிக்கை

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு ஒன்றாக பிரகடனம் செய்ய அமெரிக்க நிர்வாகம் தயாராகி வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இவ்வாறான ஒரு அறிவிப்பு எகிப்தின் மிகப் பழமையான இஸ்லாமிய இயக்கத்திற்கு எதிராக பயணம் மற்றும் பொருளாதார தடைகளை ஏற்படுத்துவதாக அமையும். முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மத்திய கிழக்கு எங்கும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டதாகும்.

எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசி கடந்த ஏப்ரலில் வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட பின்னரே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நடவடிக்கையை எடுப்பதற்கு சிசி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை கேட்டுக்கொண்டிருந்தார். இந்த நடவடிக்கைக்காக நிர்வாகம் செயற்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை ஊடகப் பேச்சாளர் சாரா சான்டர்ஸ் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டார்.

“ஜனாதிபதி தனது நிலைப்பாடு பற்றி தேசிய பாதுகாப்புக் குழு மற்றும் பிராந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். உள்ளக செயற்பாடுகள் மூலம் இதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன” என்று சான்டர்ஸ் குறிப்பிட்்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி இடம்பெற்ற டிரம்ப் மற்றும் சிசிக்கு இடையிலான சந்திப்புக்குப் பின்னர் சகோதரத்துவ அமைப்புக்கு எதிரான தடையை முன்னெடுப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகளை விழிநடத்தி இருப்பதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை எகிப்து ஏற்கனவே தீவரவாத இயக்கமாக அறிவித்துள்ளது.

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சிக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சி ஒன்றை மேற்கொண்டே சிசி பதவிக்கு வந்தார்.

வெள்ளை மாளிகையின் முடிவுக்கு மத்தியில் தமது செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுவதாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தனது இணைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

1928 ஆம் ஆண்டு ஹஸன் அல் பன்னாவினால் நிறுவப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தனது அரசியல் பார்வை மற்றும் நலன்புரி செயற்பாடுகள் மூலம் உலகெங்கும் செல்வாக்கு மிக்க இஸ்லாமிய அமைப்பாக உள்ளது.

Thu, 05/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை