ஆஸ்பத்திரிகளில் மருந்து தட்டுப்பாடு; விரைவில் நிவர்த்திப்பதாக ராஜித உறுதி

ஆஸ்பத்திரிகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் விரைவான நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  

அத்துடன் தற்போது நிலவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டுமென அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.  

ஆஸ்பத்திரிகளில் மருந்துகளை தட்டுப்பாடின்றி மக்களுக்கு விநியோகிக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் அமைச்சரின் தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம், மருந்துக் கட்டுப்பாட்டுப் பிரிவு, விநியோகப் பிரிவு உள்ளிட்ட துறைசார்ந்த    அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.  

இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன,  

கடந்த வருடத்தில் இறுதிப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற அரசியல் குழப்பகரமான காலங்களில் 216மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் பாதிப்பு இன்று வரை தொடர்கிறது.  

கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் நாட்டில் நிலவிய குழப்பகரமான சூழ்நிலையின் போது திட்டமிடல் அமைச்சின் குழறுபடி நிலை காரணமாக ஆஸ்பத்திரிகளுக்கு முறையாக மருந்துகள் வழங்கப்படவில்லை. அக்காலத்தில் மேற்படி மருந்துகள் தட்டுப்பாட்டுக்குள்ளானது. 52 நாட்கள் தொடர்ந்த அரசியல் நெருக்கடியில் எந்தவொரு கேள்விப்பத்திரமும் கோரப்படவில்லை. அதேவேளை, எந்த மருந்துப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படவுமில்லை. இந்நிலையில், தற்போது நிலவும் சிறு அளவிலான மருந்து தட்டுப்பாட்டுக்கு விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டுமென அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்  

Tue, 05/28/2019 - 09:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை