அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக வாக்களிக்க ரெலோ தீர்மானம்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் பங்காளிக் கட்சியான ரெலோ தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் கட்சியின் செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கிணங்கவே கட்சி செயற்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த முடிவுக்கான காரணங்கள் தொடர்பில் தெளிவுபடுத்திய அவர்,

ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பையடுத்து நாடு முழுவதிலும் அதன் விளைவுகளும் அது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தமக்கெதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் தாம் சம்பந்தப்படவில்லை என்பதை நிரூபிக்கவேண்டும்.

அவர் தம்மை நிரபராதி என நிரூபிக்கவேண்டுமானால், தமது அமைச்சுப் பதவியை துறக்கவேண்டும். அமைச்சு பதவியில் இருந்துகொண்டே தாம் நிரபராதி என அவர் கூறுவதில் அர்த்தமில்லை. அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலகி தாம் நிரபராதி என நிரூபித்த பின்னர் மீண்டும் அந்த அமைச்சு பதவியை அவர் பொறுப்பேற்கலாம் என்றும் அடைக்கலநாதன் எம்.பி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேக நபரொருவரை விடுவிப்பதற்காக அவர் இராணுவத் தளபதிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் அத்தோடு பயங்கரவாதத்துக்கு உதவிகள் மற்றும் அனுசரணைகள் பெற்றுக்கொடுத்துள்ளாரென்றும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அவர் தமது அமைச்சுப் பதவியிலிருந்து விலகி தாம் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதே ரெலோ கட்சியின் எதிர்பார்ப்பாகும்.

அவர் அமைச்சுப் பதவியிலிருக்கும் நிலையில் அவர் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் அழுத்தங்கள் ஏற்படலாம். அத்தகைய நிலையில் விசாரணைகள் நீதியானதாக இடம்பெறும் என எதிர்பார்க்க முடியாது என்பதாலேயே அவர் பதவி விலகுவது சிறந்தது என்றும் கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார். தமது இந்தத் தீர்மானத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்துக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நான்கு கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) சார்பில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 05/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை