மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தீவிர ஏற்பாடுகள்

பாடசாலைகள் 6ம் திகதி ஆரம்பம்

அதிபர்கள், செயலாளர்கள், பணிப்பாளர்களுக்கு கல்வியமைச்சு அறிவுறுத்தல்

நாட்டிலுள்ள தமிழ்,சிங்கள அரசாங்கப் பாடசாலைகள்  அனைத்தும் எதிர்வரும் 6ம் திகதி மீண்டும் ஆரம்பமாகவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பாடசாலை வளாகத்துள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கு மேற்கொள்ளப்பட  வேண்டிய நடவடிக்ைககள் தொடர்பாக கல்வியமைச்சின் செயலாளர் எம். என். ரணசிங்க சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இச்சுற்றுநிருபம் மாகாண பிரதம செயலாளர்கள்,மாகாண கல்விச் செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டத்துக்குப் பொறுப்பான பிரதி மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அனைத்துப் பாடசாலை அதிபர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அச்சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: நாட்டின் எதிர்காலம் தொடர்பான முக்கிய தீர்மான காரணியாக அமையும் மனிதவள விருத்தியின் இன்றியமையாத கேந்திர நிலையங்கள் பாடசாலைகளாகும். அதற்கமைய, சமூக நிலையமான பாடசாலைக்கு ஒப்படைக்கப்பட்ட பிரதம பணியாக அமைவது மாணவர் சமூகத்துக்கு பாதுகாப்பான சூழ்நிலையை பாடசாலைக்குள் நிர்மாணித்து முழுமையான ஆளுமையுடன் கூடிய சிறந்தவர்களாக அவர்களை சமூகமயப்படுத்தப்படும் வாய்ப்பை வழங்குவதாகும்.

பாடசாலை மாணவர்கள் தமது அன்றாட உயிர்ப்பான காலப் பகுதியில் கணிசமான நேரப் பகுதியை பாடசாலைக்குள் கழிக்கின்றனர். ஆகவே,மாணவர்கள் பாடசாலைகளுக்குள் நுழைந்தவுடனே அனைத்து மாணவர்களின் பொறுப்புக்கும் பாதுகாப்புக்கும் உரிய முழுமையான பொறுப்பு அதிபர்கள் மற்றும் உரிய பணியாளர் குழுமத்துக்கு உரித்ததாகும். அதுஅவர்களின் கடமைக் கூறின் பகுதியாக இருப்பதோடு முழு பணியாளர் குழுமத்தின் பொறுப்பாகவும் கடப்பாடாகவும் அமைகின்றது.

சுற்றுநிருப இலக்கம் 2011/17க்குஅமைவாக பிள்ளைகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதை தவிர்த்து அவர்களை பாதுகாப்பதற்காக தற்போது பாடசாலைகளில் 'பாடசாலை மாணவர் பாதுகாப்பு குழு –சுரெக்கும் பவ்வ' வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி தற்போது நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலை காரணமாக பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக முறையான வேலைத்திட்டத்தின் தேவைப்பாடு எழுந்துள்ளது. அதன்படி  இந்த சுற்றுநிருபத்தின் அறிவுரைப்படி செயற்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

1.0   பாடசாலை சமூகத்துக்கு அறியத்தருதல்:

 மாணவர்களினதும் பதவியணியினரதும் பாதுகாப்பு, ஆபத்தான நிலைமையின் போது செயற்பட வேண்டிய விதம், அனர்த்தம் மற்றும் இடர்நேர்வு நிலவரத்தை இனங்காணல் மற்றும் தவிர்த்தல் முதலானவை தொடர்பாக கவனத்தைச் செலுத்தி பாடசாலை பாதுகாப்பு தொடர்பான வேலைத் திட்டத்தை தயாரித்து அது தொடர்பில் பாடசாலையின் அனைத்து பதவியணியினர், மாணவர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களுக்குஅறியத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

2.0   பாதுகாப்புக் குழுவை அமைத்தல்:

பாடசாலைக்குள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளல் தொடர்பாக பாதுகாப்புக் குழு மற்றும் உபகுழுக்கள் சிலவற்றை அதிபர்,பிரதி அதிபர் உள்ளிட்டதாக ஆசிரியர்கள்,பெற்றோர்,பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்போடு அமைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குழுக்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை பாடசாலை முகாமைத்துவ குழு தீர்மானித்துக் கொள்வதோடு,தேவைக்கேற்ப கூட்டங்களை நடத்தி அறிக்கைகளை பேணிக் கொள்ள வேண்டும்.

3.0   பாதுகாப்பு தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய வேலைத் திட்டம்:

மேற்கூறிய குழுவால் பாடசாலையின் பாதுகாப்பு தொடர்பான வேலைத் திட்டம் தயாரிக்கப்பட்டு கீழ்க் குறிப்பிட்ட அடிப்படை விடயங்கள் தொடர்பாக கவனத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம். இது தொடர்பாக பிரதேசத்துக்கு அண்மித்த பொலிஸ் நிலையம் விசேட பாதுகாப்புக் குழுவை அமைத்திருந்தால் அதன் அனுசரணையை பெற்றுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

3.1 பாடசாலைமற்றும் பாடசாலை சுற்றாடல் பகுதியை சோதனை செய்து இடர்நேர்வு நிலைமை இல்லாமை குறித்து உறுதி கொள்ளல் வேண்டும். அதற்காக மேற்கூறிய குழுகள் மற்றும் உரிய பங்காளர்களிடம் முறையாக பொறுப்பை வழங்கி எழுத்து மூலமாக அறிக்கையிடும் முறையை கடைப்பிடித்து பாடசாலையின் அதிபர்/பிரதி/உதவி அதிபர் ஒருவர் ஊடாக மேற்பார்வை செய்ய வேண்டும்.

3.2 பாடசாலைக்கு மாணவர்கள் வருகையின் போது பாடசாலையின் பிரதான மற்றும் பிற நுழைவாயில்களையொட்டிய வழிகளில் நெருக்கிடைகளை இழிவளவாக்குவதற்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும். இதன் போது பாடசாலை போக்குவரத்து சேவைகள் செயற்படுமாயின் வாகன தரிப்பிடங்கள் மற்றும் நேரங்கள் தொடர்பாக உரிய சாரதிகளை அறியத் தந்து பொருத்தமான வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

3.3 பாடசாலைக்குள் நுழைபவர்களின் அடையாளத்தை உறுதி செய்து கொள்வதோடு பயணப் பொதிகள்,பாடசாலைப் பைகள் மற்றும் ஏனைய பொருட்களை சோதித்துக் கொள்வதோடு கூடியதாக அவற்றை பாடசாலை வளாகத்துள் கொண்டு வரும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

3.4 பகுதித் தலைவர்கள் மற்றும் வகுப்பு பொறுப்பு ஆசிரியர்களின் மேற்பார்வையின் கீழ் வகுப்பறைக்குள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.

3.5 தேவையற்ற வித்தில் மாணவர்கள் வகுப்பறையிலிருந்து வெளியேறுதல்,பாடசாலை வளாகத்துள் தேவையற்ற விதத்தில் நடமாடுதல் முதலியவற்றை தவிர்க்க நடவடிக்கையெடுப்பதோடு மாணவ விடுதிகளையும் பாதுகாக்க வேண்டும்.

3.6 பாடசாலை மாணவர்களை ஓன்றிணைத்து பாடசாலையில் நடத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்கள் பாடசாலைக்கு வெளியே நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவது முதலியவற்றை இழிவளவாக்குவதோடு, அத்தகைய சந்தர்ப்பங்களின் போது மாணவர்களின் உச்சளவிலான பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளல்.

3.7 பாடசாலை இடைவேளை நேரத்திலும் பாடசாலைக்குள் மாணவர்கள் ஒன்றுசேரும் காலைக் கூட்டம் போன்ற சந்தர்ப்பங்களில் ஆசிரியர்களினதும் மாணவ தலைவர்களினதும் தலைமையில் மேற்பார்வை வேலைத் திட்டத்தை மேற்கொள்ளல்.

3.8 பாடசாலைக்குள் அடிக்கடி மற்றும் அன்றாடம் பாவிக்கப்படாத கேட்போர் கூடம்,விளையாட்டுக் கூடம் அல்லது பிறிது கட்டடத்துக்குள் மாணவர்கள் நடமாடுவதை இழிவளவாக்குவதும் பாதுகாப்புவேலைத் திட்டத்தை மேற்கொள்ளலும்.

3.9 பொதுமக்கள் தினத்தில் அதிபரை சந்தித்தல்,சான்றிதழ்கள் வழங்குதல் போன்ற செயற்பாடுகள் தொடர்பாக வளாகத்துள் வருவதற்கு அனுமதி பெற்றுக் கொடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

3.10அவசர நிலைமைகளின் போது செயற்பட வேண்டிய விதம் குறித்து மணவர்கள் மற்றும் பாடசாலை பதவியணியினர் குழுவை அறியச் செய்யும் தொடர்பாடல் முறைமை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

3.11மாணவர்கள் பாடசாலையிருந்துவெளியேறும் போது தேவையற்ற நெருக்கடி ஏற்படுவதைத் தவிரத்துக் கொள்ளக் கூடிய முறையைப் பின்பற்ற வேண்டும். இதற்காக உரிய போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனங்களோடு கலந்துரையாடி பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

3.12 விளையாட்டு மற்றும் பாட இணைச்செயற்பாட்டு நடவடிக்கைகளுக்காக பாடசாலை ஆரம்பமாவதற்கு முன்னரோ பாடசாலை நேரத்தின் பின்னரோ மாணவர்கள் தரித்திருப்பராயின் ஆசிரியர்களின் முழுமையான மேற்பார்வை அதன் போது இருக்க வேண்டும்.

3.13 பாடசாலை நேரத்துக்கு முன்பின் வெளிநபர்கள் பாடசாலை வளவுக்குள் நுழைவதற்கு இருக்கும் வாய்ப்பினை இழிவளவாக்குதல் வேண்டும்.

3.14 விளையாட்டுத் திடல்,பாடசாலைக் கட்டடங்கள் முதலானவை வெளியாருக்கு வழங்குவதாயின் பாடசாலையின் பாதுகாப்பு தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.

3.15 அவசரநிலையின் போது தகவல் அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்கள் மற்றும் முறைகள் தொடர்பாக முறையான தொடர்பாடல் வேலைத் திட்டதை தயாரித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறியத் தருதல் வேண்டும்.

3.16 பாடசாலைக்கு பல்வேறு சேவைகள் வழங்கும் நபர்களின் வாகனங்கள்,பாடசாலை பதவி அணியினரின் வாகனங்கள் என்பனவற்றை உரிய சோதனைகளுடன் பாடசாலை வளாகத்துள் உள்ளனுமதித்தல் வேண்டும்.

3.17 பாடசாலை வளாகத்தை சுத்திகரிக்கும் வேலை செய்வதோடு பாவனைக்கு உட்படுத்தப்படாத மரத்தளபாடங்கள்,உரகரணங்கள்,கழிவுப் பொருட்கள் முதலானவற்றை முறையாக அகற்றுதல் அல்லது பொருத்தமானவாறு இடநிலைப்படுத்தல் மற்றும் பாவனைக்கு உட்படுத்தாத கட்டடங்கள் இருக்குமாயின் அது தொடர்பாக கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

3.18 பாடசாலை வளாகத்தை பாதுகாப்பது குறித்த வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு மாணவர் படையணி பொறுப்பு லுவலர்கள் மற்றும் மாணவர் படையணி மாணவர்களின் உதவியை பெற்றுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பாடசாலையின் அனைத்து பதவியணியினர்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் மற்றும் கல்விப் புலம் தொடர்பான அனைத்து அலுவர்களும் இந்த பாதுகாப்பு வேலைத் திட்டம் வெற்றிகரமாக்கிக் கொள்ளப்பட முழுமையான பொறுப்போடு செயற்பட வேண்டுமென்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரதிகள்  ஜனாதிபதியின் செயலாளர்,பிரதமர் செயலாளர்,பாதுகாப்பு செயலாளர், -

பொலிஸ் மாஅதிபர்-,பணிப்பாளர்(தேசிய மாணவர் படையணி தலைமையகம்) ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

 

Thu, 05/02/2019 - 09:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை