பொருளாதார பாதிப்பிலிருந்து நாட்டை ஒரு வருடத்தில் மீட்க முடியும்

உதிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பிலிருந்து நாட்டை ஒருவருடத்தில் மீட்க முடியும். இதற்கு நாட்டிலுள்ள சகல தரப்பினரும் ஒன்றிணைந்து, கொள்கைத் திட்டமிடலுடன் செயற்படுவது அவசியம் என அமைச்சர் கலாநிதி ஹர்ஷ.டி.சில்வா வலியுறுத்தினார்.

விசேட வியாபார பண்ட அறவீடுகள் கட்டளைகளை அங்கீகரிப்பது மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னரான ஷொக் நாட்டுக்கு எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பார்க்கப்பட வேண்டும். இது பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்ட பாரிய அடியாகவுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு எதிர்வரும் நாட்களில் சுற்றுலாத்துறையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சில ஹோட்டல்களின் பதிவுகள் 5 வீதமாகக் குறைந்திருப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு நிவாரணம் வழங்குமாறு கோரியிருந்ததுடன், அரசாங்கம் உடனடியாக தலையிட்டு அவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

முதற்கட்டமாக வங்கியில் பெறப்பட்ட கடன்களுக்கே முன்னுரிமை கொடுத்துள்ளோம். மீண்டும் நாளை அமைச்சரவை உபகுழு கூடி ஏனைய விடயங்கள் குறித்து ஆராய்ந்து பார்க்கவுள்ளோம்.

சுற்றுலாத்துறையினர் வங்கிகளில் பெற்ற கடன்களை 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை செலுத்தவேண்டியதில்லை. அவர்களால் செலுத்தமுடியாது போன கடன் தவணையை அடுத்தவருடம் ஜுலை மாதத்திலிருந்து புதிய கடன்போல மீளச்செலுத்திச் செல்ல முடியும். அத்துடன் அவர்களுக்கான வற் வரியை 5 வீதமாகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம். கென்யா, எகிப்து போன்ற நாடுகளில் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது அவை எவ்வாறு அதிலிருந்து மீண்டன என்பது குறித்த தகவல்கள் முன்வைக்கப்பட்டன. பெரும்பாலான நாடுகள் ஒரு வருடத்துக்குள் பாதிப்புக்களிலிருந்து குறிப்பாக பொருளாதார பாதிப்புக்களிலிருந்து மீண்டுள்ளன.

இந்தப் பிரச்சினையிலிருந்து மீண்டெழுவதற்கு எடுக்கவேண்டிய கொள்கை ரீதியான தீர்மானங்கள் குறித்து அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதன் அடிப்படையிலேயே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். சுயாதீனமான பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதன் அடிப்படையிலேயே சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க முடியும்.

சுனில் ஹந்துந்நெத்தி (ஜே.வி.பி)

நாட்டில் காணப்படும் நிலையைப் பயன்படுத்தி ஒரு இனத்தின் வர்த்தகத்தை மற்றொரு இனம் புறக்கணிக்க வேண்டும் என்ற பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசியல், மத ரீதியாக வைராக்கியத்தை ஏற்படுத்திக் கொள்வதால் நாட்டின் பொருளாதாரமே பாதிக்கப்படும். இவ்வாறான நிலைமையைத் தடுப்பதற்கு அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சர், சுற்றலாத்துறை அமைச்சர் என பொறுப்புக்கூறவேண்டிய அமைச்சர்கள் எவரும் இந்த விடயங்கள் குறித்து எதனையும் பாராளுமன்றத்துக்குத் தெரிவிக்கவில்லை.

பொருளாதார ரீதியில் சரியான பாதையிலில் நாடு பயணிக்கவில்லை. இவ்வாறான நிலையில் அண்மையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களைப் பயன்படுத்தி விலை அதிகரிப்பு உள்ளிட்ட மக்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக் கூடாது.

மஹிந்த அமரவீர (ஐ.ம.சு.மு)

அண்மைய தாக்குதல்களால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் மக்களின் வாழ்க்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு இவற்றிலிருந்து மீள்வது தொடர்பில் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் நல்ல யோசனைகள் முன்வைக்கப்படாவிட்டால் நாட்டில் உள்ள மக்கள் தமக்கான உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு இரண்டு மூன்று வருடங்களில் தள்ளப்பட்டுவிடுவார்கள்.

சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா (த.தே.கூ)

விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படத்தை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் கைதுசெய்யப்பட்டமை தமிழ் மக்களைத் தொடர்ந்தும் அடக்கிவைத்திருக்கும் முயற்சியாகவே பார்க்கின்றோம். பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளபோதும், வவுனியாவில் முஸ்லிம் ஒருவரால் நடத்தப்படும் ஹோட்டலில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த ஹோட்டல் தற்பொழுது திறக்கப்பட்டு வியாபாரம் முன்னெடுக்கப்படுகிறது. இத்தகைய பாரபட்சமான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

பாடசாலைகளில் சோதனைகளை மேற்கொள்வதற்கு ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் பயன்படுத்தப்படுகின்றனர். இதனால் பெற்றோர் தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டுகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் எவ்வாறு பிள்ளையை பாடசாலைக்கு அனுப்ப முடியும் என பெற்றோர் ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார். இவ்வாறான சூழ்நிலையில் பாடசாலைகளில் சோதனைகளை நடத்துவதற்கு தன்னார்வ நிறுவனங்களின் உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்டவர்களின் உதவிகளைப் பெற்று சோதனைகளை நடத்த முடியும்.

டக்ளஸ் தேவானந்தா (ஈ.பி.டி.பி)

2019ஆம் ஆண்டில் கட்டாயமாக விஜயம் செய்ய வேண்டிய நாடு இலங்கை’ என சுற்றுலாப் பயணத்துறை சார்ந்த வழிகாட்டியான ‘லோன்லி பிளனெற்’ ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன் காரணமாக இலங்கை தொடர்பில் வெளிநாட்டவர் மத்தியில் ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால், தற்போது இலங்கை தொடர்பில் விழிப்புணர்வு கொள்ள வேண்டிய நிலைக்கு வெளிநாட்டவர்களை மட்டுமல்லாது, உள்நாட்டவர்களையும் தள்ளிவிட்டுள்ளது. சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி ஒரு பக்கம் தொடர்கின்ற நிலையில், அதை நம்பியிருக்கின்ற ஏறத்தாள சுமார் 4 இலட்சம் மக்களது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கென சில சலுகைகளை வழங்குவதாக நீங்கள் அறிவித்தாலும், அதனை நான் வரவேற்பதுடன், அது முற்று முழுதாக சுற்றுலாத்துறையை நம்பி வாழுகின்ற அனைவருக்கும் நிவாரணங்களை வழங்கப் போவதில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

குறிப்பாக, சுற்றுலாத்துறையையும் நம்பிய முச்சக்கர வண்டிக் கைத்தொழிலானது கிட்டத்தட்ட நூற்றுக்கு 80 வீதமாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

சுற்றுலாத்துறை வழிகாட்டிகளாக தங்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொண்டிருந்த பலரது வாழ்க்கை இன்று பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடக் கூலிகளாக வேலை செய்து, தங்களது வாழ்வாதாரங்களை அன்றாடம் ஈட்டிக் கொள்கின்றவர்களுக்கு தற்போது போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. அவர்களது குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ள நிலைமைகள் காணப்படுகின்றன.

முஜிபுர் ரஹ்மான் (ஐ.தே.க)

நாட்டின் தேசிய நல்லிணக்கம் ஒற்றுமையை விரும்பாதவர்களே பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை சுயநல அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் அரசாங்கம் கட்டியெழுப்பிவந்த நல்லிணக்க வேலைத்திட்டங்கள் அனைத்தும் பயங்கரவாத தாக்குதல் காரணமாக நொடிப்பொழுதில் அழிவடைந்திருக்கின்றது.

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக அரசாங்கத்துகே பாரியளவில் இழப்பு ஏற்பட்டிருக்கின்றது. அத்துடன் இந்த தாக்குதலால் முஸ்லிம் சமூகத்துக்கும் பாரிய தலைகுனிவு ஏற்பட்டிருக்கின்றது. முஸ்லிம் மக்கள் ஒருபோதும் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கமாட்டார்கள். என்றாலும் இன்று முஸ்லிம் மக்களை சந்தேகம் கண்ணோடு பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

குறிப்பாக விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தொடர்ந்து முஸ்லிம் உறுப்பினர்களை விமர்சித்து வருகின்றார். ஆனால் அவ்வாறு விமர்சிக்க முன்னர் விமல் வீரவன்சவின் வரலாறை திருப்பிப்பார்க்க வேண்டும். 88, 89 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தெற்கில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களையும் பொலிஸாரையும் கொலை செய்து வந்தவர். இளைஞர்களை பிழையாக வழிநடத்தி நாட்டில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர். இன்று அவர் உத்தமர்போல் செயற்படுகின்றார்.

பயங்கரவாத செயலுக்காக மாற்று பெயர்களை பயன்படுத்தி வந்தவர். இன்றும் சட்டவிரோத செயலுக்காக நீதி மன்றில் வழக்கு இருந்து வருகின்றது.

மேலும் இந்த பயங்கரவாத தாக்குதலால் அரசாங்கத்துக்கே அதிகம் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. நாட்டில் கட்டியெழுப்பி வந்த நல்லிணக்கம் சிதைவடைந்திருக்கின்றது. இந்த பயங்கரவாதத்துக்கு பின்னால் சர்வதேச சக்தி இருக்கலாம். இதனை கட்டுப்படுத்த வேண்டும். முஸ்லிம் சமுகம் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

ஏனெனில் முஸ்லிம் மக்களே இன்று பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் பயங்கரவாதத்தை கூண்டோடு ஒழிக்க பாதுகாப்பு பிரிவுக்கு முஸ்லிம் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் ஒத்துழைத்து வருகின்றனர்.

Fri, 05/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை