பொதுக்கூட்டத்தில் அமளி; பதவி விலகுவதாக வவுனியா அதிபர் அறிவிப்பு

பொதுக்கூட்டத்தில் அமளி; பதவி விலகுவதாக வவுனியா அதிபர் அறிவிப்பு-Vavuniya Tamil Maha Vidyalaya Principal Resigns

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட அமளி துவளியை அடுத்து, தான் பதவியிலிருந்து விலகிச்செல்வதாக அதிபர் பொதுச்சபையில் தெரிவித்தார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச்சங்க பொதுக்கூட்டம் இன்று (26) காலை 9.00 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் அதிபர் த. அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது அண்மையில் பாடசாலையில் மாணவியொருவரிடம், காவலாளி தனது உடைகளை களைந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயன்றமை சபையில் பகிரங்கமாக பாடசாலையின் ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்டதுடன் காவலாளி தொடர்ந்தும் பாடசாலையில் கடமையாற்றுவதாகவும் அதற்கு அதிபர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

பொதுக்கூட்டத்தில் அமளி; பதவி விலகுவதாக வவுனியா அதிபர் அறிவிப்பு-Vavuniya Tamil Maha Vidyalaya Principal Resigns

இதன்போது சபையில் அனைவரும் குழப்பமடைந்து அதிபருக்கு எதிராக கோசமெழுப்பிய நிலையில் பெண் ஆசிரியர்கள் பலரும் ஆண் ஆசிரியர்கள் சிலரும் அதிபருக்கு ஆதரவாகவும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு நடவடிக்கை எடுக்காமைக்கு ஆதரவாகவும் கோசங்களை குரல் எழுப்பியவாறு சபையின் நடுவே வந்தனர்.

இதன் போது ஆசிரியர்களுக்கு எதிராகவும் பாடசாலைக்கு மாணவிகளை அனுப்புவதற்கு அச்சம் கொள்வதாகவும் தெரிவித்து பெற்றோர் கோசங்களை எழுப்பியதுடன், சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு ஆதரவாக இருந்த ஆசிரியர்களையும் அதிபரையும் வெளியேறுமாறும் அதிபரை பதவியில் இருந்து விலகுமாறும் கோரினர்.

அதிபர் பதிவில், குறித்த சம்பவம் பதிவிடப்பட்டிருந்த போதிலும் மாணவியும் அவரின் பெற்றோரும் நடவடிக்கைக்கு உடன்படவில்லை என்பதாலேயே தான் பொலிஸிலோ ஏனைய இடத்திலோ முறையிடவில்லை என தெரிவித்ததோடு, இதன் பின்னர் தான் அதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

எனினும் பெற்றோர் அதிபரின் செயற்பாடு பிழை எனவும் பொலிஸிடம் முறையிட்டு பொலிஸே நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்ததுடன் அதிபரே முதல் குற்றவாளியெனவும், அதிபருக்கு ஆதரவு தெரிவித்த ஆசிரியர்களும் குற்றவாளிகளே என தெரிவித்து சபையில் நியாயத்தினை கேட்டு நின்றனர்.

இந்நிலையில் பாடசாலையில் பல்வேறு பண மோசடிகள் இடம்பெறுவதாக, பழைய மாணவர் சங்கம் குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டு சென்றபோது பழைய மாணவரும் பெற்றோருமான ஒருவர் இதனை விசாரிக்க குழு அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

அதனை முதலில் ஏற்றுக்கொண்ட அதிபர் தான் அதற்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவித்த நிலையில் அதற்கான குழு நியமிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போது, தான் இன்றிலிருந்து குறித்த பதவியில் இருக்கப்போவதில்லை எனவும் தான் அதிபர் பதவியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்து சபையில் இருந்து வெளியேறியிருந்தார்.

இதன்போது பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிலர் அதிபரின் முடிவை வரவேற்றதுடன் புதிய அதிபரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்து கூட்டத்தினை நிறைவு செய்து வெளியேறியிருந்தனர்.

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)

Sun, 05/26/2019 - 16:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை