எதிர்க்கட்சித் தலைவர் எந்த முன்னெச்சரிக்கையும் எனக்கு விடுக்கவில்லை

சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது

பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் சுமந்திரன் எம்.பிக்கு, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ முன்னெச்சரிக்கை விடுத்ததாக  வெளியான செய்தி குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினை எழுப்பினார்.

தனக்கு அவ்வாறான எந்தவொரு முன்னெச்சரிக் கையையும் எதிர்க்கட்சித் தலைவர் வழங்கவில்லையென்றும், ஆங்கில ஊடகம் முற்றிலும் அடிப்படையற்ற செய்தியை வெளியிட்டமை குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என்றோ அல்லது தாக்குதல்களின் பின்னர் குண்டர்கள் தாக்குதல்களை அங்கு நடத்தலாம் என்றோ எவரும் தனக்கு முன்னெச்சரிக்கை விடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றம் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எழுப்பினார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆங்கில நாளிதழ் ஒன்று முன்பக்கத்தில் அரசியல் கிசுகிசுப்புச் செய்தியாக, உதிர்த்த ஞாயிறு தினத்தன்று நான் மட்டக்களப்பு தேவாலயமொன்றுக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், குறித்த தேவாலயம் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளது என்பதால் அங்கு செல்ல வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தன்னை எச்சரித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், முற்றிலும் பொய்யான செய்தி என்பதை பகிரங்கப்படுத்தியிருந்தேன். உதிர்த்த ஞாயிறு தினத்தன்று நான் கொழும்பிலேயே இருந்தேன்.

இதன் பின்னர் மறுப்புச் செய்தியொன்றை வெளியிட்ட குறித்த பத்திரிகை, குண்டுத் தாக்குதல் பற்றி எனக்குத் தெரியப்படுத்தப்படவில்லை யென்றும், தாக்குதலின் பின்னர் குண்டர்கள் தாக்குதல் நடத்தலாம் என்றே எதிர்க்கட்சித் தலைவர் எனக்கு எச்சரித்ததாகவும், மொழி பெயர்ப்பின்போது தவறு ஏற்பட்டுவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மறுப்புச் செய்தியும் அப்பட்டமான பொய்யாகும். எதிர்க்கட்சித் தலைவர் என்னிடம் இவ்வாறான தாக்குதல்கள் எது பற்றியும் கூறவில்லை.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 

Fri, 05/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை