சம்மாந்துறை சுற்றிவளைப்பு: செந்நெல் கிராமத்தில் வெடிபொருட்கள் மீட்பு

துறைநீலாவணை, சம்மாந்துறை கிழக்கு தினகரன், ஆலையடிவேம்பு சுழற்சி நிருபர்கள்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செந்நெல் கிராமத்தில் பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து நடத்திய தேடுதலின் போது இரண்டு கை துப்பாக்கிகள், வெற்றுத் தோட்டாக்கள், வயர் மற்றும் குண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் யூரியா உரம் என்பனவற்றை படையினர் கைப்பற்றினர்.

அம்பாறை, சம்மாந்துறைப் சென்னல் நகர் பிரதேசத்தில் நேற்றுக் காலை முதல் பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது மல்கம்பிட்டி வீதியில் அமைந்துள்ள பாழடைந்த வீட்டிலிருந்தே ஒரு தொகை வெடிபொருட்கள் மற்றும் ஆயுதப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தார்.

200 ஜெலிட்னைட் குச்சிகள், டெட்டனேட்டர்கள், 03 ரி-56 ரக துப்பாக்கிகள், மெகசீன்கள், 02 கைத்துப்பாக்கிகள் என்பன கைப்பற்றப்பட்டன. குறித்த வீட்டின் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சம்மாந்துறை பிரதேசத்தில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் கூட்டாக இணைந்து வீடு வீடாகச் சென்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். நேற்றுக் காலை 6 மணி தொடக்கம் இத்தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இதன்போது சந்தேகத்துக்கிடமான வீடுகளின் சுற்றுப்புறங்கள், வாகனங்கள், ஆவணங்கள் என்பன பரிசோதிக்கப்பட்டதுடன் நபர்கள் தொடர்பான விசாரணைகளை பாதுகாப்புத்தரப்பினர் மேற்கொண்டனர்.

Thu, 05/02/2019 - 06:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை