அணு சக்தி உடன்படிக்கையின் முக்கிய கடப்பாடுகளில் இருந்து ஈரான் விலகல்

யுரேனியத்தை செறிவூட்டத் திட்டம்

வல்லரசு நாடுகளுடனான 2015 ஆம் ஆண்டின் அணு சக்தி உடன்படிக்கையின் முக்கியமான கடப்பாடுகளில் இருந்து ஈரான் விலகிக் கொண்டுள்ளது. இந்த உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகி ஓர் ஆண்டுக்குப் பின்னரே ஈரான் இந்த முடிவை எடுத்துள்ளது.

யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு விற்பதற்கு பதில் அதனை தொடர்ந்து செறிவூட்டுவதாக ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரூஹானி குறிப்பிட்டுள்ளார். 60 நாட்களில் யுரேனியம் செறிவூட்டலை உயர் மட்டத்தில் ஆரம்பிப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஈரான் மீதான தடையை தளர்த்துவதற்கு பகரமாக ஈரான் தனது அணு சக்தி நோக்கை முடக்குவதாகவே இந்த உடன்படிக்கை அமைந்திருந்தது. எனினும் இந்த உடன்டிக்கையில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டதை அடுத்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் தடைகள் மீண்டும் அமுலுக்கு வந்ததை அடுத்து ஈரான் பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் இந்த உடன்படிக்கையில் தொடர்ந்து நீடிக்கும் தரப்புகளான பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு ஈரான தனது முடிவை நேற்று அறிவித்துள்ளது.

இதற்கு பதில் அளித்து கருத்துக் கூறிய பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் பிளோரன்ஸ் பார்லி, இந்த உடன்படிக்கையை தக்கவைக்க ஐரோப்பிய சக்திகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டன. எனினும் உடன்பாடு இல்லாத பட்சத்தில் சிக்கல்கள் மற்றும் தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரித்தார்.

இந்த உடன்படிக்கையின்படி ஈரான் தன்னிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட உபரி யுரேனியத்தை தொடர்ந்து செறிவூட்டுவதற்கு பதில் அதனை வெளிநாட்டுக்கு விற்பதற்கு கோரப்பட்டிருந்தது.

ஈரானின் சிவில் தேவைக்கான அணு சக்திக்கு இது முக்கியமானது என்றபோதும் இது அணு ஆயுதம் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்பட முடியும்.

இதனை வெளிநாட்டுக்கு விற்பதற்கு மத்தியில் ஈரானுக்கு தொடர்ந்து அணுசக்தியை உருவாக்க முடியும். எனினும் ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதில்லை என்பதை உடன்பாட்டு தரப்புகளுக்கு உறுதி செய்தல் வேண்டும்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ திட்டமிடாத திடீர் விஜயமாக ஈராக்கிற்கு பயணித்திருப்பது மற்றும் அமெரிக்க விமானதாங்கி கப்பல் வளைகுடா பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் நிலையிலேயே ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

Thu, 05/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை