யாழ்.பல்கலையின் தகுதி வாய்ந்த அதிகாரியாக சிரேஷ்ட பேராசிரியர் கந்தசாமி

யாழ்ப்பாண  பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இ.விக்னேஸ்வரன் இடைநிறுத்தப்பட்டதை  தொடர்ந்து சட்ட ஏற்பாடுகளுக்கமைவாக பல்கலைக்கழகத்துக்கு தகுதி வாய்ந்த  அதிகாரியாக (Competent Authority) யாழ். பல்கலைக்கழக சிரேஷ்டபேராசிரியர்  க.கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந் நியமனம் தொடர்பான விசேட  வர்த்தமானி அறிவித்தலானது நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி  அமைச்சர் ரவூப்ஹக்கீமினால் நேற்றிரவு வெளியிடப்படும் என்று உயர்கல்வி  அமைச்சு தெரிவித்துள்ளது. வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதும்,  யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரிக்கான நியமனம் குறித்து  உயர்கல்வி அமைச்சினால் அனுப்பிவைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக  சட்டத்துக்கமைவாக புதிய துணை வேந்தருக்கான தேர்தலை நடத்தி, பல்கலைக்கழக  பேரவையின் சிபார்சுடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்  பரிந்துரையின் அடிப்படையில் புதியவரொருவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும்  வரை மூன்று மாதகாலத்துக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண  பல்கலைக்கழக பௌதிகவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியரான க.கந்தசாமி தனது  பல்கலைக்கழக சேவையில் பௌதிகவியல்துறைத் தலைவராகவும், விஞ்ஞான  பீடாதிபதியாகவும் பதவி வகித்ததுடன், யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம்,  தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றின் ஸ்தாபக பீடாதிபதியாகவும் இருந்தவராவார்.  அத்துடன் இலங்கை தேசிய கல்வி ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்களுள்  ஒருவராகவும் இவர் செயற்படுகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.

(கொக்குவில் குறூப் நிருபர்)

Wed, 05/08/2019 - 08:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை