முக்கிய துறைமுகத்தில் இருந்து யெமன் கிளர்ச்சியாளர்கள் வாபஸ்

யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹுதைதா துறைமுகத்தில் இருந்து வெளியேற ஆரம்பித்துள்ளனர். கடந்த டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையின் முக்கிய அம்சமாக இது இடம்பெற்றுள்ளது.

முக்கியமான மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பதற்காக ஹுதைதா துறைமுகத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஹூத்தி மற்றும் அரச படை இணங்கியது.

ஹூத்திப் படை ட்ரக் வண்டிகளில் ஏறி வெளியேறுவதை வீடியோக்கள் காட்டுகின்றன. இந்தப் படைகள் வாபஸ் பெற நான்கு தினங்கள் எடுத்துக் கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் நிர்வாகக் குழுத் தலைவர் முகமது அல் ஹூத்தி கடந்த சனிக்கிழமை கூறியதாவது:

ஐ.நா. முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில், கிளர்ச்சிப் படையினர் சனிக்கிழமை காலை 10 மணி முதல் ஹுதைதா நகரிலிருந்து வெளியேறத் ஆரம்பித்துள்ளனர்.

அந்த அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஹுதைதா நகரின் சில பகுதிகளில் உள்ள யெமன் அரசு ஆதரவுப் படையினரும் வெளியேற வேண்டும்.

எனினும், அந்தப் படையினர் அந்தப் பகுதிகளைவிட்டு வெளியேறுவதைத் தாமதப்படுத்தி வருகின்றனர் என்றார். எனினும் கிளர்ச்சியாளர்கள் சூழ்ச்சியில் ஈடுபட்டிருப்பதாக அரச தரப்பு குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து இந்தத் துறைமுகத்தில் ஐ.நா முக்கிய பங்காற்றவுள்ளது.

யெமன் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு வீதமானவர்களின் வாழ்வாதாரமாக இந்த துறைமுகம் உள்ளது. இது மூடப்பட்டது நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதோடு, பஞ்சத்தையும் கொண்டுவந்துள்ளது.

யெமனில் நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு யுத்தத்தில் குறைந்தது 6,800 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10,700 பேர் வரை காயமடைந்திருப்பதோடு தடுக்க முடியுமான ஊட்டச்சத்தின்மை, நோய்கள் மற்றும் மோசமான சுகாதாரம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

Mon, 05/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை