உபாதையில் இருந்து மீண்ட இசுரு உதான, பெர்னாண்டோ

தென்னாபிரிக்காவிற்கு எதிரான பயிற்சிப்போட்டியில் காயமடைந்த இலங்கை வீரர்களின் நிலை குறித்து இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தகவல் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதிய உலகக் கிண்ண தொடருக்கான பயிற்சிப் போட்டியில் இலங்கை வீரர்கள் அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் இசுரு உதான ஆகியோர் காயமடைந்தனர். இதனால், போட்டியின் பாதியில் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடிய போது, இலங்கை அணியின் 18 ஆவது ஓவரை இசுரு உதான வீசினார். இந்த ஓவரில் பெப் டு ப்ளெசிஸ் அடித்த பந்து ஒன்றை அவிஷ்க பெர்னாண்டோ தடுக்க முற்பட்ட போது, மைதானத்தில் சறுக்கி விழுந்தார். இதனால் அவரது காலில் உபாதை ஏற்பட்டதுடன், அவரால் எழுந்து நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் ஸ்டெச்சர் மூலமாக மைதானத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதுடன், அவிஷ்க பெர்னாண்டோ துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கவில்லை. இதேவேளை, இறுதி ஓவரை வீசிய இசுரு உதானவின் கையை இரண்டு தடவைகள் பந்து கடுமையாக தாக்கியிருந்தது.

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக காயமடைந்த இருவரும் துடுப்பெடுத்தாட களமிறங்கவில்லை. இதனால், இருவரின் நிலை குறித்து கேள்விகள் எழுந்திருந்தன.

இந்நிலையில், தென்னாபிக்க அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னர் கருத்து தெரிவித்த திமுத் கருணாரத்ன, காயமடைந்த அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் இசுரு உதான நலமாக இருக்கின்றனர். இருவரும் அடுத்த பயிற்சிப் போட்டியில் விளையாடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி அடுத்த பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை இன்று எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 05/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை