வவுனியாவிலிருந்து பாகிஸ்தான் அகதிகளை வெளியேற்றாவிட்டால் தொடர் போராட்டம்

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள வடக்கு மாகாண கூட்டுறவுப் பயிற்சி கல்லூரியில் வெளிநாட்டு அகதிகளை தங்க வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முகாமுக்கு பௌத்த குருமார் செல்ல முயன்றதால் பதற்ற நிலை ஏற்பட்டது.

நேற்று முன்தினம் மாலை கொட்டும் மழைக்கு மத்தியில் மதகுருமார் செல்ல முற்பட்டனர். மடுக்கந்தை விகாராதிபதி தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் பௌத்த பிக்குகள் மற்றும் நகரசபை, பிரதேச சபை தவிசாளர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று நண்பகல் இடம்பெற்றது.

இதனையடுத்து வவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பௌத்த பிக்குகள் இது தொடர்பில் அரச அதிபர் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் கடிதம் ஒன்றை கையளித்தனர்.

அதன் பின்னர் கொட்டும் மழைக்கு மத்தியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள வடமாகாண கூட்டுறவு பயிற்சி கல்லூரி வளாகத்திற்குள் செல்ல முற்பட்டனர்.

இந் நடவடிக்கையை பொலிசார் தடுத்து நிறுத்தியமையால் குழப்ப நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு இராணுவத்தினர் குவிக்கப்பட்டதுடன், வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து பௌத்த பிக்குளுடன் கலந்துரையாடி அவர்களை அங்கிருந்து வெளியேற்றினார். இதேவேளை இன்னமும் ஓரிரு தினங்களுக்குள் வெளிநாட்டு அகதிகளை வெளியேற்றாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் பௌத்த பிக்குகள் தெரிவித்தனர்.

வவுனியா விசேட நிருபர்

Thu, 05/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை