சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கஉலக நாடுகள் கரம் கோர்க்க வேண்டும்

சீன மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரி உலகத் தலைவர்களுக்கு அழைப்பு

மத தீவிரவாதத்தால் உருவாகும் பயங்கரவாதம் உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு அனைத்து நாடுகளும் நட்புடன் கைகோர்க்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சீனாவின் பீஜிங் நகரில் நேற்று (15) ஆரம்பமான ஆசிய நாகரிகங்கள் பற்றிய சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் தலைமையில் பீஜிங் நகரில் ஆரம்பமானது. இம்மாநாட்டில் விசேட விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

47 நாடுகளின் அரச தலைவர்கள் உள்ளிட்ட 2000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.மனித இனத்தின் இருப்பு உலகளாவிய ரீதியில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளதால் உலக மக்கள் மத்தியில் பரஸ்பர நம்பிக்கையையும் கௌரவத்தையும் பாதுகாக்கும் நோக்குடன் ஆசிய நாகரிகங்கள் பற்றி விரிவாக கருத்துக்களை பரிமாறிக்கொள்வதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். இம் மாநாடு மே 22 ஆம் திகதி வரை பிஜிங் நகரில் நடைபெறும்.

ஆசிய நாகரிகங்கள் பற்றி கலந்துரையாடும் இந்த மாநாட்டில் எழும் குரல்களும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் தலைமைத்துவத்தில் நட்புறவு அமைப்பாக உருவாகும் ஐக்கியமும் சர்வதேச பயங்கரவாதம் சமயத் தீவிரவாதங்களை ஒழிப்பதற்கான சக்தியாக

மாற்றிக்கொள்ள வேண்டுமென இம்மாநாட்டில் ஜனாதிபதிகருத்து தெரிவித்தார். ஒரு நாகரிகத்தை மற்றுமொரு நாகரிகத்தினால் அடிமைப்படுத்த முடியாது. நாகரிகத்தையும் கலாசாரத்தையும் சட்டத்தினால் அல்லது சர்வதேச கட்டளையினால் அடிமைப்படுத்த முடியாது. இலங்கையின் நாகரிகம் 2,600 வருடங்களுக்கு மேற்பட்ட பௌத்த நாகரிகத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டிருப்பதுடன், சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலேயர், பறங்கியர் ஆகிய இனங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றன.

இவர்கள் பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமயங்களை சேர்ந்தவர்கள் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

எந்தவொரு நாட்டுக்கும் எந்தவொரு இனத்திற்கும் எந்தவொரு நாகரிகத்திற்கும் அல்லது கலாசரத்திற்கும் அச்சுறுத்தலாக இல்லாது சுதந்திரமாகவும் அமைதியாகவும் செயற்படும் நாடு இலங்கை. இந்த நாட்டின் நாகரிகம் மற்றும் கலாசாரத்திற்கு மறைமுகமான சக்திகளால் விடுக்கப்படும் சவால்களின்போது அனைவரும் ஒருமித்து கைகோர்க்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எனவே தமக்கே உரித்தான நாகரிகம் மற்றும் கலாசரத்தின் முக்கியத்துவத்துடன் ஒரே தேசமாக அனைத்து நட்புறவு நாடுகளுக்குமிடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதற்கான விரிவான சர்வதேச நிகழ்ச்சித்திட்டமொன்றின் அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும், சீனா போன்ற பெரும் நாகரிகமொன்றைக் கொண்டுள்ள நாட்டில் இவ்வாறானதொரு மாநாடு நடத்தப்படுவதன் மூலம் அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியதெனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த மாநாட்டில் இலங்கையும் பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பமளித்தமைக்காக சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் உள்ளிட்ட சீன அரசாங்கத்திற்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

 

Thu, 05/16/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக