நம்பிக்கையில்லா பிரேரணையை முதலில் விவாதத்திற்கு எடுத்தால் தெரிவுக்குழுவில் பங்கேற்க தயார்

மிலேச்சத்தமான தாக்குதல்களை மேற்கொண்டவர்களையும் அடிப்படைவாதத்திற்கு துணைப்போகின்றவர்களையும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக பாதுகாக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதா என சந்தேகம் எழுவதாக தினேஷ் குணவர்தன எம்.பி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முதலில் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டால் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்ள தயாராகவுள்ளோமென்றும் அவர் கூறியுள்ளார். அரசியல் வாழ்வில் 36 வருடங்களை கடந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நேற்றுமுன்தினம் விசேட மதவழிபாடுகளில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்

 அவர் மேலும் கருத்து தெரிவிக்ைகயில்,

பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டுள்ளமைக்கான பல காரணங்களின் பிரகாரமே அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்துள்ளோம். பொது மக்களின் பாதுகாப்பு எமக்கு மிகவும் முக்கியமானதாகும். ஆனால், நம்பிக்கையில்லாப் பிரேரணையை வலுவிலக்க அரசாங்கம் நடவடிக்கையெடுத்து வருகிறது.

சிங்களம், தமிழ், முஸ்லிம் என மூவின மக்களும் இந்த நாட்டில் வாழவேண்டும். அடிப்படைவாதிகளுக்கும் மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கும் துணைப்போனவர்களுக்கு எதிராக நாட்டின் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு வருகிறது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர் எந்தவொரு தெரிவுக்குழுவிலும் பங்கேற்க நாங்கள் தயாராகவுள்ளோம். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக இதனை மூடிமறைக்கும் செயற்பாட்டையே அரசாங்கம் முன்னெடுப்பதாக எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தின் பின்னர் எந்தவொரு செயற்பாட்டிலும் கலந்துகொள்ள தயாராகவுள்ளோம். அரசாங்கத்தின் உறுப்பினர்களும் இதற்கு ஆதரவளிக்க உள்ளனர்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Mon, 05/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை