முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை; கூட்டமைப்பு கவலை

சுயமாக வாழ்வதற்காகப் போராட இன்னொரு சமுதாயத்தையும் தூண்டாதீர்

கிறிஸ்தவ ஆலயங்களைத் தாக்குகின்ற பயங்கரவாதம் என்றாலும் சரி, பள்ளிவாசல்களைத் தாக்குகின்ற பயங்கரவாதம் என்றாலும் சரி எவ்விதமான பயங்கரவாதமும் நாட்டில் இருக்கக் கூடாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் குறிப்பிடுகையில், கடந்த இரண்டு நாட்களாக முஸ்லிம் வீடுகள், வியாபாரஸ்தலங்கள், பள்ளிவாசல்கள் காடையர் தாக்குதலுக்குள்ளாகும் செய்திகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த கவலையடைகிறது. ஊரடங்குச் சட்ட நேரத்திலும் பாதுகாப்பு படையினர் இந்த வன்செயல்களைத் தடுப்பதற்கு உகந்த நடவடிக்கை எடுக்காமலிருப்பது கண்டனத்துக்குரியது.

வன்முறையாளருக்கெதிராக உடனடியானதும் கடுமையானதுமான நடவடிக்கைகளை அதிகாரத்திலுள்ளோர் எடுக்க வேண்டும் என்று கோருகிறோம். அரசாங்கம் தம்மை பாதுகாக்க தவறுகிறது என்று மக்கள் நினைத்தால் அவர்கள் தம்மை தாமே பாதுகாக்க தலைப்படுவார்கள். இப்படியான சூழ்நிலையை அனுமதிக்க வேண்டாம் என்று நாம் அரசாங்கத்தை கேட்டுக் கொள்ளுகிறோம்.

இந்த நாட்டில் தான் சுயமாக வாழ்வதற்குப் போராட்டத்தைக் கையிலெடுக்க வேண்டும் என்று இன்னுமொரு சமூகத்தையும் நினைக்கத் தூண்டாதீர்கள். கிறிஸ்தவ ஆலயங்களைத் தாக்குகின்ற பயங்கரவாதம் என்றாலும் சரி, பள்ளிவாசல்களைத் தாக்குகின்ற பயங்கரவாதம் என்றாலும் சரி - எவ்விதமான பயங்கரவாதத்திற்கு இந்த நாட்டிலே இடமிருக்கக் கூடாது என அவர் மேலும் வலியுறுத்தினார்.

நமது நிருபர்

Wed, 05/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை