இனங்களையும் மதஸ்தலங்களையும் சேதப்படுத்தி சிங்கள பௌத்த அரசை வலுவூட்ட முடியாது

பௌத்த சித்தாந்தங்களை பின்பற்றி ஏனைய இனத்தவர்களையும், மதங்களையும் பாதுகாத்து அனைவரும் ஐக்கியத்துடன் வாழ வேண்டும். ஏனைய இனங்களையும் மத வழிபாட்டுத் தலங்களையும் சேதப்படுத்தி, சிங்கள பௌத்த அரசாங்கத்தை வலுவூட்ட முடியாது என்று வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வலஸ்முல்ல கிரன சுபோதாராம விஹாரையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அறநெறி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் இங்கு தெரிவித்துள்ளதாவது, இனப் பேதங்களை முன்னிலைப்படுத்தி வன்முறைகளை மேற்கொள்ளும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சம்புத்த சாசனம் சீர்குலைகிறது. பௌத்த சித்தாந்தங்களை பின்பற்றி அனைத்து இனத்தவர்களையும், மதங்களையும் பாதுகாத்து ஐக்கியத்துடன் வாழ வேண்டும். ஏனைய இனத்தவர் மற்றும் மதங்களின் வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்தி சிங்கள பௌத்த அரசாங்கத்தை வலுவூட்ட முடியாது.

அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு முக்கிய இடம்

வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதற்குத் தேவையான நடைமுறை வலுவையும், பாதுகாப்பையும் பொதுமக்கள் வழங்காவிட்டால் பௌத்தம் வலுவடையாது.

அறநெறிப் பாடசாலைக் கட்டடமானது சிசு தஹம் செவன வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய கலாசார நிதியத்தின் நிதியுதவி மூலம் நிர்மாணிக்கப்படுகிறது. அறநெறிக் கல்வியை வழங்குவதற்கு போதுமான கட்டட வசதி மற்றும் வளம் இல்லாத பின்தங்கிய பகுதிகளில் உள்ள பௌத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய அறநெறி பாடசாலைகளை மேம்படுத்தும் நோக்கில் சிசு தஹம் செவன வேலைத்திட்டம் நாடு தழுவிய ரீதியில் நடைமுQறைப்படுத்தப்படுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Mon, 05/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை