ஐ.எஸ் பயங்கரவாதத்திற்கு முஸ்லிம்கள் ஆதரவு இல்லை

ஐ.எஸ் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க முடியாதளவுக்குப் புதிய நடைமுறை உருவாக்கம்

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதம் தலைதூக்க முடியாதளவுக்குப் புதிய முறைமையொன்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அரபுநாடுகள் சிலவற்றில் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்புக்கு பொது மக்களின் ஆதரவு உள்ளது. எனினும் இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எவ்வித ஆதரவும் இல்லை. அடிப்படைவாத செயற்பாடுகளை மேற்கொண்டு அவர்களுக்கு ஆதரவை ஏற்படுத்தினால் நாட்டில் பாதுகாப்புப் பிரச்சினை ஏற்பட்டு விடும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

சிவில் சமூக மற்றும் தொழிற்சங்க ஒன்றிணைப்பின் உறுப்பினர்களை சந்தித்தபோதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டினார். இக்கலந்துரையாடலில் வணக்கத்துக்குரிய தம்பர அமில தேரர், கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, கலாநிதி பாக்கியஜோதி சரவணமுத்து, பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர, பேராசிரியர் எச்.டபிள்யு. சிறில், கலாநிதி ஜெஹான் பெரேரா, சமன் ரத்னப்பிரிய, சுனில் டி சில்வா,

பிலிப் திசாநாயக்க, ராஜா உஸ்வெடிகெய்யாவ, சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னர் நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பிலும், அந்த தாக்குதலை தவிர்ப்பதற்கு தவறியமை தொடர்பில் அரசியல் மற்றும் நிறுவனங்களின் பொறுப்புக்கள் தொடர்பில் சிவில் சமூக மற்றும் தொழிற்சங்க ஒன்றிணைப்பின் உறுப்பினர்கள் பிரதமரிடம் காரணங்களைக் கேட்டறிந்துகொண்டனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலின் பின்னர் அரசியல்வாதிகளான எம்மீது மக்களுக்கு நம்பிக்கை இழக்கப்பட்டுவிட்டது. இதனை மீண்டும் கட்டியெழுப்புவதாயின் நாம் தற்பொழுது முன்னெடுத்திருக்கும் முறையின் ஊடாக ஏற்படுத்த முடியாது. இதற்காக விசேட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதம் தலைதூக்காமிலிருப்பதற்கு புதிய முறையொன்றை ஏற்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரபுநாடுகள் சிலவற்றில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு பொது மக்களின் ஆதரவு உள்ளது. எனினும் இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எவ்வித ஆதரவும் இல்லை. இவ்வாறான நிலையில் தேவையற்ற முறையில் இனவாதத்தையும், மதவாதத்தையும் ஏற்படுத்தச் சென்று அவர்களுக்கான ஆதரவை ஏற்படுத்திவிடக்கூடாது. அவ்வாறு ஆதரவை ஏற்படுத்துவோமாயின் அது நாட்டின் பாதுகாப்புக்குப் பிரச்சினையாக அமைந்துவிடும்.

குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைத்துள்ளோம். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவேதான் இரண்டு வாரங்களுக்குள் தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சபாநாயகரிடம் கேட்டுள்ளேன். உண்மைகளை நாட்டு மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தெரிவுக்குழுவின் சகல கலந்துரையாடல்கள் மற்றும் அதன் நடவடிக்கைகளை ஊடகங்களின் மூலம் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கும் அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கேட்டுள்ளோம் என்றார்.

மதரஸாக்களை நிர்வகிப்பது பற்றிய சட்டவரைபு தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்தினர் தாமாக முன்வந்து இவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் செயற்படுகின்றனர் என்றார்.

நமது நிருபர்

Mon, 05/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை