வெளிநாட்டு இராணுவத்தினரை அழைக்கும் நோக்கம் கிடையாது

உயிரை கொடுத்தேனும் தாய்நாட்டை காப்பாற்றியே தீருவேன் ஜனாதிபதி

விசாரணைக்குழு அறிக்ைக தொடர்பில் சட்ட மாஅதிபருடன் இன்று பேச்சு

பிரபல நாடுகளின் புலனாய்வு நிபுணர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு உலக பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து வெற்றிகரமாக ஒழிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வெளிநாட்டு இராணுவத்தினரை இலங்கைக்கு அழைக்கும் எத்தகைய நோக்கமும் கிடையாது என்றும் எமது புலனாய்வு பிரிவினர் மற்றும் படையினரோடு சர்வதேச புலனாய்வுப் பிரிவு மற்றும் தொழில்நுட்ப துறையினரின் ஒத்துழைப்புடன் உலக பயங்கரவாதத்தை எம்மால் ஒழிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதற்கான ஆத்ம உறுதியும் எமது படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் மீதான நம்பிக்கையும் தமக்குள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, குண்டுத் தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் இடைக்கால அறிக்கை தமக்குக் கிடைத்துள்ளதாகவும் இன்றைய தினம் தாம் அதன் அடுத்த கட்ட நடவடிக்ைக தொடர்பில் சட்ட மாஅதிபருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வு நேற்றைய தினம் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. இடதுசாரி தலைவர்கள் உட்பட  நாட்டின் தொழிற்சங்க தலைவர்கள் பலரும் கலந்துகொண்ட இந் நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

இம்முறை எமது மே தினம் பேரணி மற்றும் கூட்டங்கள் எதுவுமின்றி இடம்பெறுகின்றன. அதனை உலக பயங்கரவாதிகள் மௌனிக்கச் செய்துவிட்டார்கள். இதற்கு முன்னரும் சில தடவைகள் நாட்டில் மே தினம் நிகழ்வுகள் நடைபெறவில்லை. முப்பது வருட யுத்த காலத்தின் போது சில வருடங்கள் அவ்வாறு மே தினம் தடைசெய்யப்பட்டது.

தற்போதுள்ள நிலையில் வீதியிலோ அல்லது மைதானங்களிலோ மேதினக் கூட்டங்களை நிகழ்த்தமுடியாமல் போயுள்ளது. எனினும் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக ஒன்றுகூடியிருப்பது போல நாம் எதிர்கொண்டுள்ள உலக பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் நாம் ஒன்றிணைய வேண்டும்.

ஒரு நாடு துயரத்தை சந்திக்கின்ற போது அதில் சளைத்துவிடாமல் அதனை நாட்டின் எதிர்கால பலமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என மாவோ சேதுங் கூறியுள்ளார். அதேபோன்று கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற மிகவும் வேதனையான சம்பவங்கள் தொடர்பில் நாம் மிகுந்த துயரமடைவதுடன் அதனை நாட்டின் எதிர்கால வெற்றியின் பலமாக்கிக் கொள்வோம். எமது கடந்த கால அனுபவங்களை வைத்துக்கொண்டு அனைவரும் ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைந்து தொழிலாளர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வது அவசியம். அதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க நாம் தயாராகவுள்ளேன். தற்போது நாட்டில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையே முக்கியமாகவுள்ளது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நாம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளோம். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் கடந்த 15 வருடமாகவுள்ளது. 2013 ஆம் ஆண்டிலிருந்து அது முன்னேற்றமடைந்துள்ளது. அவர்களது செயற்பாடுகள் தொடர்பில் எமது புலனாய்வு பிரிவினர்கள் அவதானத்தைச் செலுத்தியே வந்துள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதி நான் சிங்கப்பூரில் இருந்தபோது இந்த வேதனையான சம்பவத்தைக் கேள்விப்பட்டேன். இது எவ்வாறு நடந்தது என நான் அதிர்ச்சியடைந்ததுடன் அது எவ்வாறு நடந்தது என்பது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக உடனடியாக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறும் அதற்கான பெயர்களையும் எனது செயலாளருக்கு அறிவித்தேன்.அதற்கான வர்த்தமானியையும் வெளியிடக் கூறினேன்.

22 ஆம் திகதி அக்குழு நியமிக்கப்பட்டது. 23 ஆம் திகதியிலிருந்து அக்குழு செயற்பட ஆரம்பித்துள்ளது. தகவல்களை வழங்கக்கூடிய எவரும் அக்குழுவுக்கு தகவல்களை வழங்க முடியும்.

சர்வதேச பயங்கரவாதம் தொடர்பில் எமது ஊடகங்களுக்கு குறைவான அவதானமே இருந்துள்ளது. எனினும் கடந்த 21 ஆம் திகதிக்குப் பின்னர்தான் அது தொடர்பில் அனைவரதும் கவனம் திரும்பியுள்ளது. சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் மற்றும் நாடுகளின் தலைவர்களுக்கு இது தொடர்பில் நாம் அறிவித்துள்ளோம். அனைத்து நாடுகளினதும் ஒத்துழைப்புக்கள் எமக்குக் கிடைக்கின்றன.

உலக பயங்கரவாதத்தை எடுத்துக்கொண்டால் செப்டம்பர் 11 ஆம் திகதி நியூயோர்க்கிலுள்ள உலக வர்த்தக மையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் அதில் பலியானவர்களின் எண்ணிக்கை அறியமுடியவில்லை. பெண்டகன் மீது பின்லேடன் தாக்குதல் நடத்திய போதும் அது தொடர்பில் எவரும் முன்னமே அறிந்திருக்கவில்லை.

இது எமது நாட்டின் பயங்கரவாதத்தை விட வித்தியாசமானது. ஐரோப்பிய நாடுகள் 22 உள்ள போதும் அதில் 12 நாடுகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அவுஸ்திரேலியா,இந்தோனேசியா, இந்தியா, அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட நாடுகளும் தாக்குதலுக்க உள்ளாகியுள்ளன. பெருமளவானோர் பலியாகியுமுள்ளனர். எனினும் இந்தச் சம்பவங்கள் இடம்பெறும் வரை அது தொடர்பில் அவர்கள் எவரும் அறிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் அதனைத் தடுத்திருப்பர்.

எமது நாட்டில் இரு உயர் அதிகாரிகள் இது தொடர்பில் அறிந்நிருந்தனர்.பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர்எமது சகோதர நாட்டின் புலனாய்வுப் பிரிவு மூலம் இது தொடர்பில் ஏற்கனவே அறிந்திருந்தனர். ஏப்ரல் நாலாம் திகதி இது தொடர்பில் அறியக்கிடைத்திருந்தும் 12 நாட்களாகியும் எனக்கு அவர்கள் அறிவித்திருக்கவில்லை. அவர்களால் இதை தடுத்திருக்க முடியும்.அவர்கள் அதைச் செய்யவில்லை.

நாம் இதுதொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்காக நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை இரண்டு வாரத்தில் நான் கோரியுள்ளேன்.

அக்குழுவின் இடைக்கால அறிக்கை எனக்கு கிடைத்துள்ளது. நான் இன்றைய தினம் அது தொடர்பில் சட்டமா அதிபருடன் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கலந்துரையாடவுள்ளேன்.

30 வருடம் நாம் குண்டுகளுடன் வாழ்ந்தவர்கள். எனக்கு முதல் நாட்டை ஆட்சிசெய்த ஐந்து ஜனாதிபதிகளின் காலத்தில் நாட்டில் குண்டுகள் வெடித்தன. ஜே.ஆர். ஜயவர்த்தன முதல் மஹிந்த ராஜபக்ஷவின் காலம் வரை குண்டுகள் மூலம் மக்கள் பலியாகினர். பெரும் அழிவுகள் ஏற்பட்டன. நான் பொலன்னறுவையில் வசித்தேன். எனக்கு அது தொடர்பில் சிறந்த அனுபவமுண்டு.

30 வருட காலமாக புலிகள் மேற்கொண்ட பயங்கரவாதத்துக்கும் உலக பயங்கரவாதத்துக்குமிடையில் பெரும் வித்தியாசமுடையது. இரண்டையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. புலிகளின் பயங்கரவாதம் இந்த நாட்டிலேயே உருவானது. உலக பயங்கரவாதம் எங்கு உள்ளது எங்கு செயற்படுகின்றது என்பது தெரியாது. அந்தப் பயங்கரவாதக் குழுவின் தலைவன் நாலு வருடங்களுக்கு முன் இறந்துவிட்டதாக தகவல்கள் வந்தபோதும் நேற்று முன்தினம் அவர் மீண்டும் வந்து உலகத்துக்கே அச்சுறுத்தல் விடுக்கின்றார். அவ்வாறு வித்தியாசமான பெரும் பலமுள்ள பயங்கரவாதமது. அது தொடர்பில் நாம் வித்தியாசமாக செயற்படவேண்டியுள்ளது.

நாட்டில் சிலர் நாம் வெளிநாட்டிலிருந்து இராணுவத்தை கொண்டுவரப் போவதாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். நாம் அவ்வாறு கொண்டுவரப்போவதில்லை. எமது படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினருக்கு பயங்கரவாத்தை தோற்கடிப்பதற்கான பலமுண்டு என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. நாம் புதிய பாதுகாப்பு செயலாளரையும் பொலிஸ் மா அதிபரையும் நியமித்துள்ளோம். பல பிரபல நாடுகளின் புலனாய்வுப் பிரிவினர் எமது புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். அதற்கு மேலாக சர்வதேச நாடுகளின் புலனாய்வு நிபுணர்களின் ஒத்துழைப்பும் எமக்கு அவசியமாகும். நாம் சாதாரணமாக சிந்திப்பதை விடுத்து புத்திகூர்மையுடன் சிந்திக்கவேண்டியுள்ளது. எவ்வாறெனினும் உலக பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு சர்வதேச உதவியுடன் நாம் நடவடிக்கை எடுப்போம். பல முகநூல்களில் எனது மரணம் விரைவில் என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதைப் பார்த்தேன். நான் மரணத்துக்கு பயந்தவனல்ல. ஏற்கனவே நான் பல தாக்குதல்களுக்கு உள்ளாகியவன். மனிதன் இறப்பது இயல்பே.

நாம் நாட்டிலுள்ள சகல பாடசாலைகள், மத தலங்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் பாதுகாப்பு வழங்கியுள்ளோம். நாட்டின் 21 மில்லியன் மக்களுக்கும் நாம் பாதுகாப்பு வழங்குவோம். ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் தற்போது உலக பயங்கரவாதத்துக்கு எதிராக செயற்படுபவர்கள். ஆனால் அவர்களுக்கே பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் அறியமுடியாதுள்ளது.

உலகின் முன்னேற்றமடைந்த நாடுகள் எதிர்கொள்ளும் உலக பயங்கரவாதத்தை வெற்றி்கொள்ள எம்மால் முடியும். அதற்கான மனஉறுதி எமக்குள்ளது. சர்வதேசத்தின் உதவியுடன் உலக பயங்கரவாதத்தை தோற்கடிப்போம். நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நாம் அனைவரும் அவதானமாக செயற்பட்டால் எம்மால் அது முடியும். எமது படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் அதனை வெற்றிகரமாக மேற்கொள்வர் என்ற நம்பிக்கை எமக்குண்டு என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 05/02/2019 - 06:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை