மத, மொழிகளில்லாத பொதுவான கல்வி முறையே அரசின் எதிர்பார்ப்பு

சிங்கப்பூரின் கல்வித்திட்டம் குறித்தும் ஆராய்வு

மதங்கள் மற்றும் மொழிகளின் அடிப்படையில் பாடசாலைகளை பிளவுப்படுத்தாது பொதுவான கல்வி முறைமையை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகவுள்ளது. அதற்குத் தேவையான மூலோபாயங்கள் தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  

சிங்கப்பூரின் கல்வி முறைமை மிகவும் சிறந்ததாகவுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக கல்வி அமைச்சின் அதிகாரிகளைக் கொண்ட குழாமொன்று விரைவில் சிங்கப்பூர் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.  

அலரிமாளிகையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அவர் மேலும் இங்கு சுட்டிக்காட்டியதாவது,  

மதங்களை முன்னிலைப்படுத்தி பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என்ற அடிப்படையில் பாடசாலைக் கல்வியை முன்கொடுண்டுசெல்ல வேண்டுமா அல்லது பொதுவான கல்வி முறையொன்றை கொண்டுசெல்ல வேண்டுமா என நாம் தீர்மானிக்க வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் அறநெறி பாடசாலைகள் உட்பட அனைத்தையும் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவர தீர்மானித்துள்ளோம்.  

பாடசாலைகளுக்கு அறிஞர்களினதோ அல்லது மதத் தலைவர்களினதோ பெயரை வைப்பதில் பிரச்சினை இல்லை. என்றாலும், இனம், மதம் அடிப்படையில் பெயர்களை வைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. இரண்டு ஆண்டு கால அவகாசம் வழங்கி இன, மத அடிப்படையிலான பாடசாலைகளை பொதுவான பாடசாலைகளாக மாற்றிக்கொள்ள சந்தர்ப்பமளிக்க தீர்மானித்துள்ளோம். அனைவரும் நட்புறவுடன் கல்வி பயிலும் பாடசாலைகளை உருவாக்க வேண்டும்.  

இந்து,இஸ்லாம் மற்றும் கத்தோலிக்கர்கள் இணைந்து வெசாக் தினத்தை கொண்டாடியதை நாம் பார்த்தோம். எமது நாட்டின் பாடசாலைகளை மறுகட்டமைப்பு செய்வதன் மூலமே இதனைப் பாதுகாக்க முடியும். எதிர்காலத்தை சிந்தித்தே முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க சிறந்த கல்வி முறைமையை உருவாக்கியிருந்தார்.

அதிலிருந்து நாம் விடுபட்டுவிட்டாலும் இன்று சிங்கப்பூரில் இக்கல்வி முறையே உள்ளது. சிங்கப்பூரின் கல்வி முறைமை தொடர்பில் ஆராய்வதற்காக கல்வி அமைச்சின் உயர் குழாமொன்று அங்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.  

இலங்கையின் தனித்துவத்தை முதன்மையாக கொண்ட கல்வி முறையை முன்னோக்கிக் கொண்டுசெல்வதையே நாம் எதிர்பார்த்துள்ளோம் என்றார். 

சுப்பிரமணியம் நிஷாந்தன்  

Thu, 05/23/2019 - 08:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை