பொதுமன்னிப்பளிக்கும் அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்த முடியாது

சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை

அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள மன்னிப்பு வழங்கும் அதிகாரம் தன்னிச்சையாகவோ அல்லது பொருத்தமற்றவரினை மையப்படுத்தியோ பயன்படுத்தக் கூடாது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.  

ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள மன்னிப்பளிக்கும் அதிகாரம் முக்கிய பங்குதாரரான நீதிமன்றத்துடன் ஆலோசித்தே பயன்படுத்தப்பட வேண்டும் என்று கருதுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது. தண்டனை வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கும் சட்ட மா அதிபருக்குமே உள்ளது என்றும் சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.  

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி அண்மையில் பொது மன்னிப்பு வழங்கியமை தொடர்பாகவே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள விசேட அறிக்கையிலே மேற்கண்டவாறு கூறியுள்ளது.  ஹோமாகம மஜிஸ்திரேட் நீதவான் முன்னிலையில் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய சிறைத்தண்டனையை அனுபவிக்க மறுத்த நிலையிலேயே ஜனாதிபதி அவருக்கு பொது மன்னிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

அரசியலமைப்பின் 105 (1) சட்டப் பிரிவுகளின் படி நீதிமன்றத்தின் சுதந்திரம் மற்றும் அதிகாரத்தை தேவையற்ற தலையீடுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. அதேபோன்று ஜனாதிபதிக்குள்ள பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரமும் கேள்விக்குட்படுத்தக் கூடியதல்ல. எனினும், அவ்வாறான அதிகாரம் முறையான சட்டக் கொள்கைக்கு உரிய காரணத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு மாறாக செயற்படுவது நீதித்துறையின் சுதந்திரத்தை மதிப்போருக்கு அதிர்ச்சி ஏற்படுத்துவதாக அமையும் என்று கருதுவதாக சட்டத்தரணிகள் சங்கம் மேலும் கூறியுள்ளது.  

Wed, 05/29/2019 - 10:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை