யாழ். பல்கலைக்கழகத்தினுள் இராணுவம் விஷேட தேடுதல்

மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் கைது;  பயங்கரவாத சட்டத்தில் வழக்கு தாக்கல் செய்ய முயற்சி

கொக்குவில் குறுப், யாழ்.குறூப், யாழ்.விசேட நிருபர்கள்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்குள் பத்து வருடங்களுக்கு பின்னர் நேற்றைய தினம் இராணுவத்தினர் விஷேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது புகைப்படங்கள் மற்றும் தொலைநோக்கி, இராணுவ சப்பாத்து போன்றன காணப்பட்டதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இராணுவத்தினரது ஆலோசனைக்கமைய கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

 

கைது செய்யப்பட்ட மாணவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கோப்பாய் பொலிஸார் விண்ணப்பம் செய்துள்ளனர்.

விஷேட தேடுதல்

நேற்றைய தினம் வௌ்ளிக்கிழமை அதிகாலை 5 மணி தொடக்கம் திருநெல்வேலியிலுள்ள யாழ். பல்கலைக்கழக வளாகம் மற்றும் மருத்துவ பீட இறுதி வருட மாணவர்கள் தங்கியிருக்கும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மாணவர் விடுதி என்பன இராணுவத்தினரால் விஷேட தேடுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

இராணுவ கவச வாகனம் மற்றும் இராணுவ பஸ்கள் சகிதம் சுமார் 300 தொடக்கம் 450 வரையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது ஒவ்வொரு பீடங்களும் அதனுள் உள்ள விரிவுரைக்கூடங்களும் தனித்தனியாக சோதனை செய்யப்பட்டது. வளாகத்திற்குள் உள்நுழையும் ஊழியர்களின் பைகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் ஊழியர்கள் வளாகத்திற்குள் உள்நுழைய அனுமதிக்கப்பட்டனர். நுழைவாயிலில் பாதுகாப்பு கடமையிலிருந்த பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோத்தர்கள் இச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மாணவர் ஒன்றியத்தலைவர்,

செயலாளர் கைது

இச்சோதனை நடவடிக்கையின் போது யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், மற்றும் செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மாணவர் ஒன்றிய கட்டிடம் மற்றும் மாணவர் விடுதி ஆகியவற்றுக்குள்ளேயே இப் பொருட்கள் மீட்கப்பட்டதாக இராணுவம் கூறியுள்ளது. இதனடிப்படையிலேயே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கோப்பாய் பொலிஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டனர்.

பயங்கரவாத தடை சட்டத்தின்

கீழ் விசாரணை செய்ய, பாதுகாப்பு

அமைச்சிடம் கோரிக்கை

கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணை நடத்த (DO) பாதுகாப்பு அமைச்சுக்கு கோப்பாய் பொலிஸார் விண்ணப்பித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று இராணுவத்தினரால் ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மாணவர்கள் இருவரையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவர்களுடன் சுமந்திரன்,

மாவை நேரில் சந்திப்பு

மாணவர்கள் இருவரையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரும் நேரில்சென்று சந்தித்தனர். மாணவர்களது இவ் விடயம் தொடர்பில் சட்ட மாஅதிபருடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

போலிக்குண்டுகள் என

கண்டுபிடிப்பு

பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் விஞ்ஞான ஆய்வு கூடத்தில் மீட்கப்பட்டவை போலி மிதிவெடி மற்றும் கிளைமோர் என பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அவை கண்காட்சிக்காகச் செய்யப்பட்டவையாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

மருத்துவபீடத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் விடுதலைப் புலிகளின் தயாரிப்பான ஜொனி மிதிவெடி மற்றும் கிளைமோர் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும் குண்டு செயலிழக்க வைக்கும் படைப்பிரிவினர் நடத்திய பரிசோதனையில் அவை போலியாக தயாரிக்கப்பட்டவை எனக் கண்டறியப்பட்டது.

Sat, 05/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை