எதிர்க்கட்சி சதிப்புரட்சிக்கு எதிராக ஜனாதிபதி மடுரோ வெற்றி பிரகடனம்

வெனிசுவேல எதிர்க் கட்சித் தலைவர் ஜுவான் குவைடோவின் இராணுவ சதிப்புரட்சி ஒன்று முறியடிக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி நிகொலஸ் மடுரோ அறிவித்துள்ளார்.

100க்கும் அதிகமானோர் காயத்திற்கு உள்ளான கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற மோதலில் பல டஜன் இராணுவத்தினர் எதிர்க்கட்சி பக்கம் இருந்ததை காண முடிந்தது.

எனினும் தொலைக்காட்சியில் தோன்றிய ஜனாதிபதி மடுரோ, இராணுவத்தை தனக்கு எதிராக திருப்பும் குவைடோவின் முயற்சி தோல்வி அடைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

மடுரோ இராணுவத்தின் கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக குறிப்பிட்ட குவைடோ, அமைதியான ஆட்சி மாற்றம் ஒன்று பற்றி அறிவித்திருந்தார். தனது ஆதரவாளர்களை வீதிக்கு இறங்கும்படியும் அழைப்பு விடுத்தார்.

பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 50க்கும் அதிகமான நாடுகள் குவைடோவை வெனிசுவேல இடைக்கால ஜனாதிபதியாக அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் மடுரோவுக்கு சீனா, ரஷ்யா மற்றும் நாட்டின் இராணுவம் ஆதரவு வழங்குகின்றன.

இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மோசமான குற்றச்செயலில் ஈடுபட்டிருப்பதாக தனது தொலைக்காட்சி உரையில் குறிப்பிட்டிருக்கும் மடுரோ, அவர்கள் தண்டிக்கப்படாமல் விடமாட்டார்கள் என்று எச்சரித்தார்.

இந்நிலையில் தமது ஆதரவாளர்களை வீதிக்கு இறங்கும்படி மடூரோ மற்றும் குவைடோ இருவரும் அழைப்பு விடுத்துள்ளனர். இது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி மற்றும் அடிப்படைப் பொருட்களுக்கான தட்டுபாடுகள் நிலவும் வெனிசுவேலாவில் மேலும் பிரச்சினையை ஏற்படுத்துவதாக உள்ளது.

வெனிசுவேலாவில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி இருந்துவரும் நிலையில் ஜனாதிபதி மடுரோ பல மாதங்களாக மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை மிகப்பெரிய அளவில் வெனிசுவேலாவில் போராட்டங்கள் நடைபெற்றன. வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் குவைடோ மடுரோவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர இராணுவ உதவிகளை நாடினார். ஆனால், இராணுவம் மறுத்துவிட்டது.

மடுரோ நாட்டைவிட்டு வெளியேறி கியூபா செல்ல முடிவு செய்திருந்தார். ஆனால் ரஷ்யாவால் தடுத்து நிறுத்தப்பட்டார் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பொம்பியோ தெரிவிக்கிறார். எனினும் இதனை மடுரோ மறுத்துள்ளார்.

Thu, 05/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை