இலங்கை - ஸ்கொட்லாந்து இன்று ஒரு நாள் போட்டியில் மோதல்

இலங்கை அணி ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று18 ஆம் திகதியும், இரண்டாவது போட்டி 21 ஆம் திகதியும் எடிங்பேர்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

உலகக் கிண்ணம் நெருங்கிவரும் நிலையில், திமுத் கருணாரத்னவின் தலைமையில் முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி விளையாடுகிறது. 2015 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்கு பின்னர் திமுத் கருணாரத்ன ஒருநாள் போட்டிகளில் விளையாடாவிட்டாலும், உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் பிரகாசித்திருந்த காரணத்தால், உலகக் கிண்ண அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இறுதியாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என வெற்றி கொண்டதுடன், தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் பெற்றிருந்தது. இந்த தொடரில் இலங்கை அணியை சிறப்பாக வழிநடத்திய காரணத்தால், லசித் மாலிங்கவிடம் இருந்த தலைவர் பதவி திமுத் கருணாரத்னவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிய தலைவருடன் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக களமிறங்கவுள்ள இலங்கை அணி, உலகக் கிண்ணத் தொடருக்கான சிறந்த தயார்படுத்தலாக இந்த தொடரை அமைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளது. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக இழந்த இலங்கை அணி, தங்களுடைய உலகக் கிண்ண அணியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த வருடம் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடன் மொத்தமாக 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள போதும், ஒரு வெற்றியேனும் இதுவரையில் இலங்கை அணியால் பெற முடியவில்லை. அதேநேரம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 6 போட்டிகளில் மாத்திரமே இலங்கை வெற்றிபெற்றுள்ளது.

ஸ்கொட்லாந்து அணியை பொருத்தவரை, கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து தாங்கள் விளையாடிய 12 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றியை தக்கவைத்துள்ளது. இதில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பலம் மிக்க இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 371 ஓட்டங்களை விளாசி, 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை தக்கவைத்திருந்தது.

இவ்வருடம், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு ஒருநாள் போட்டியில் மாத்திரமே விளையாடியுள்ள ஸ்கொட்லாந்து அணி அந்த போட்டியில் டக்வத் லூவிஸ் முறைப்படி 2 ஓட்டங்களால் தோல்வியை தழுவியிருந்தது.

இவ்வாறு சிறப்பாக பிரகாசித்து வரும் ஸ்கொட்லாந்து அணி இலங்கை அணிக்கு இந்த தொடரில் சவால் கொடுக்கக்கூடிய அணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், இலங்கை அணி இந்த தொடரில் தங்களுடைய வெற்றியை விடவும், உலகக் கிண்ண தொடருக்கான தங்களுடைய முதன்மை பதினொருவரை தீர்மானிக்கும் வகையில் வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு அணிகளதும் கடந்தகால மோதல்களை பொருத்தவரை, இரண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. குறித்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் இலங்கை அணி இலகுவாக வெற்றிபெற்றுள்ளது. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முக்கோண தொடரின் போது, ஸ்கொட்லாந்து அணியை இலங்கை அணி, 183 ஓட்டங்களால் வீழ்த்தியிருந்ததுடன், 2015 ஆம் ஆண்டு உலகக் கிண்ண லீக் போட்டியில் 148 ஓட்டங்களால் வீழ்த்தியிருந்தது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் 2017 ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கு முன்னரான பயிற்சி ஒருநாள் போட்டியின் போது, ஸ்கொட்லாந்து அணி, இலங்கை அணிக்கு அதிர்ச்சி தோல்வியை வழங்கியிருந்தது.

ஒரு பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றிருந்த போதும், ஒரு போட்டியில் ஸ்கொட்லாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்தப் போட்டியில் 288 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கிய ஸ்கொட்லாந்து அணி வெறும், 42.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்திருந்ததை குறிப்பிடத்தக்கது.

Sat, 05/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை