நாடு கடத்தப்பட்ட மதூஷ் சி.ஐ.டியிடம்

கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் விசாரணை

போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவரும் பிரபல பாதாள உலகக் குழு தலைவருமான மாகந்துர மதூஷ் என அழைக்கப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதூஷ் லக்‌ஷித துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

துபாயில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அந் நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர் நேற்று அதிகாலை 5 மணியளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் குடியகல்வு குடிவரவு மற்றும் சுங்க அதிகாரிகளின் விசாரணையின் பின்னர் அவரைக் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்றதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

UL 226 இலக்க விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த அவரைப் பொறுப்பேற்றுள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் ஆகியோர் இணைந்து அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் அவரைக் குற்றப்புலனாய்வு திணைக்களத் தலைமையகத்திற்கு அழைத்துச் சென்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

நாட்டிலிருந்து தப்பிச்சென்று துபா யில் வாழ்ந்த மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினர் கடந்த பெப்ரவரி 5 ஆம் திகதி போதைப்பொருளுடன் துபாயில் ஹோட்டலொன்றில் இருந்து அந் நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, மாகந்துரே மதூஷுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 பேர் ஏற்கனவே நாட்டிற்கு திருப்பியனுப்பப் பட்டுள்ளனர். இவர்களில் மாகந்துரே

மதூஷின் உதவியாளரான கஞ்சிப்பானை இம்ரான் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினால் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு மேலும் சிலர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

துபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதூஷ் இலங்கையில் தமக்கு மரண அச்சுறுத்தல் உள்ளதாக அந்நாட்டின் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். எவ்வாறாயினும், மாகந்துரே மதூஷை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம் அந்நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தது. இதேவேளை, குற்றத்தடுப்பு திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று துபாய்க்கு சென்று மாக்கந்துரே மதூஷை பொறுப்பேற்று அழைத்து வந்ததாக அத்திணைக்களத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த பொலிஸ்குழுவில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் இருவரும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் அதிகாரியொருவரும் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி குழுவினர் துபாய்க்கு சென்று மதூஷை பொறுப்பேற்று அதேவிமானத்தில் தாமும் இலங்கைக்கு வந்ததாக அவ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிணங்க மதூஷின் கண் அடையாளம், விரல் அடையாளம் ஆகியவை பாதுகாப்பு கோவையில் பதிவிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க மாகந்துர மதூஷ் எந்த விதத்திலும் எச்சந்தர்ப்பத்திலும் துபாய் உள்ளிட்ட ஐக்கிய எமிர் ராஜ்ஜிய நாடுகளுக்குள் இனிமேல் பிரவேசிக்க முடியாத வகையில் இப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு மாக்கந்துர மதூஷ் இலங்கையிலிருந்து துபாய்க்கு சென்றுள்ளார். போலி கடவுச்சீட்டொன்றின் மூலமே இவர் அங்கு சென்றுள்ளதாகவும் 2016 ஆம் ஆண்டு அவருக்கு அந்த நாட்டில் தங்கியிருக்கும் வகையில் முதலீட்டு விசா வழங்கப்பட்டுள்ளது.

அவர் விமான நிலையத்தை வந்தடைந்ததும் 15 நிமிடங்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களம், சுங்கம் ஆகியவற்றின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன்பின் அவரை குற்றத்தடுப்பு திணைக்களம் கொழும்புக்கு அழைத்து வந்ததுடன் விசேட கறுப்பு ‘டின்ட்' இடப்பட்ட வான் ஒன்றிலேயே அவர் கொழும்பு குற்றத்தடுப்பு திணைக்களத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார்.

இதன்போது அவர் தாம் செய்த குற்றங்கள் மற்றும் தம்மோடு தொடர்புடையவர்கள் மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தாம் தெரிவிப்பதாகவும் தம்மைக் கொன்றுவிட வேண்டாம் என்றும் அந்த அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ளும் போது, தம்மை விடுதலை செய்யுமாறோ இலங்கைக்கு அனுப்பவேண்டாமென்றோ அந்நாட்டு நீதிமன்றத்தில் தாம் எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லையென்றும், அது தொடர்பில் தாம் எவருக்கும் தெரிவித்திருக்கவில்லையென்றும் தமக்குத் தெரியாமலேயே ஒருவரால் அவ்வாறு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த மனு தாக்கல் செய்த பின்னர் தம்மை வேறு இடத்திற்குகொண்டு சென்று அங்கு 20 தினங்கள் இருட்டறையொன்றில் சிறைவைத்திருந்ததாகவும் தாம் இலங்கைக்கு அழைத்துவரப்படும் வரை தம்மை எவரும் அங்கு வந்து சந்திக்கவில்லையென்றும் அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லையென்றும் அவர் மேற்படி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக அவ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அதற்கு முன்னர் தாம் அந்நாட்டு பொலிஸாரின் கண்காணிப்புடன் இலங்கைக்கு தொலைபேசி மூலம் அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் எனினும் குறித்த மனு தாக்கலின் பின்னரே தாம் 20 நாட்கள் இருட்டறையில் தனித்துவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் பேச்சாளர்

மாகந்துர மதுஷ் கைது தொடர்பில்

கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு அமைச்சு ஊடகமையத்தில் நேற்றுமாலை நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கமளிக்கையில் :-

துபாயிலிருந்து நாடு காடத்தப்பட்ட சமரசிங்க ஆரச்சிலாகே மதூஷ் லக்ஷித என்ற பெயருடைய மாகந்து மதூஷை விமான நிலையத்திலுள்ள சி. ஐ. டியினர் பொறுப்பேற்று கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு திணைக்கள தலைமையகத்திற்கு அழைத்துவரப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

சி.ஐ.டியினர் மதூஷை தடுத்துவைத்து தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்திவருகின்றனர். இவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையின் போது பல்வேறுதிடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

இந்தவிசாரணையின் படிசமரசிங்க ஆரச்சிலாகே மதூஷ் லக்ஷித என்ற பெயருடைய மாகந்து மதூஷ்தனது உண்மையான பெயருக்கு பதிலாக “வர்ணகுலசூரிய அஜித் அரங்க” என்ற பொய்யான பெயர்,பிறந்த திகதி மற்றும் கம்பஹா, ஜாஎலவீதி, 241/ஏ என்ற பொய்யான முகவரி என்பவற்றை பயன்படுத்தி போலியானஆவணங்களை சமர்பித்து தயாரிக்கப்பட்ட போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி 2015ஆண்டு ஜூன் மாதம் 02ஆம் திகதி துபாய் சென்றுள்ளமைஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளன.

மாத்தறை மாவட்டத்தின் மாவரலபொலிஸ் பிரிவிலுள்ள இந்திகஹாகொடெல்ல, முலன்னவீதி, மாகந்துர என்பதே இவரது உண்மையான முகவரி என்றும் அந்தமுகவரியில் தற்பொழுது அவரது மனைவி வசித்து வருகின்றமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதனையடுத்து குற்றச் செயல்கள்களுக்கு மேலதிகமாக போலிஆவணங்கள் தயாரித்தல் சட்டவிரோதமாக வெளிநாட்டு பயணித்தல் போன்றவைகள் தொடர்பிலும் தனியான விசாரணையைசி. ஐ. டியினர் ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, மதூஷ் தொடர்பில் கொலை,கொள்ளை,போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இவற்றில் 2017.05.09ஆம் திகதி பிலியந்தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி,சிறுமி ஒருவரைகொலை செய்தமை மற்றும் பொலிஸார்,சிவிலியன்கள் கயமடைந்தசம்பவம்,

2017.02.27ஆம் திகதி களுத்துரைவடக்குபொலிஸ் பிரிவில் சிறைச்சாலை பஸ் வண்டியை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிறைச்சாலைஅதிகாரிகள் இருவர் மற்றும் ஐந்துசிறைக்கைதிகள் கொலைச் செய்யப்பட்டசம்பவம்,

2018.03.07ஆம் திகதி அங்குணுகொலபெலஸ பிரதேசத்தில் கொஸ்மல்லி என்றழைக்கப்படும் சாந்தகுமார என்பவரை வெட்டி கொலை செய்து உடல் பாகங்களை ஒரு இடத்தில் புதைத்து தலையை கொழும்பு வாழைத் தோட்டபகுதியில் குப்பைதொட்டியில் வீசிய சம்பவம் போன்றபலகுற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதுதவிர 2006.06.11ஆம் திகதிகம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் தெனி ஹித்தெட்டிய என்பவரைகொலை செய்தமை உட்பட பல படுகொலைச் சம்பவங்கள், கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களினால் திறந்த பிடியாணை விடுக்கப்பட்டுள்ளன என்றார்.

இதேவேளை, வெளிநாட்டில் இருந்தவாறு இலங்கைக்குள் போதைப் பொருட் நடவடிக்கைகளை மேற்கொண்டமை,போதைப் பொருடன் தொடர்புபட்ட வலைப்பிண்ணலை இயக்கியமை தொடர்பிலும் மதூஷ் தடுத்துவைக்கப்பட்டுசீ ஐ டியினரால் தொடரந்தும் விசாரணைக்குஉட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்,

ஸாதிக் சிஹான்

 

Mon, 05/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை