வர்த்தகப் போரை நிறுத்த டிரம்புக்கு பாதணி நிறுவனங்கள் கடும் அழுத்தம

சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் போரை முடித்துக்கொள்ளுமானு உலகின் சில முன்னணி பாதணி நிறுவனங்கள் டொனால்ட் டிரம்பை வலியுறுத்தியுள்ளன. இது வாடிக்கையாளர்களை மோசமாகப் பாதிக்கும் என்று அவை எச்சரித்துள்ளன.

அடிடாஸ், நைக்கி உட்பட 173 நிறுவனங்கள் கைச்சாத்திட்டிருக்கும் அந்தக் கடிதத்தில், ஜனாதிபதி இறக்குமதி வரியை 25 வீதமாக அதிகரித்திருப்பது தொழிலாளர் வர்க்கத்தை அதிகம் பாதிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர் வரிகள் எதிர்காலத்தில் சில வர்த்தகங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்தக் கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது. “வர்த்தகப்போரை முடிவுக்குக் கொண்டுவர நேரம் வந்துவிட்டது” என்று நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

200 பில்லியன் பெறுமதியான சீன இறக்குமதிகளுக்கு டிரம்ப் வரியை 10 இல் இருந்து 25 வீதத்திற்கு அதிகமாக ஒரு வாரத்திற்கு முன் உயர்த்தியது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தக உடன்படிக்கை ஒன்று எட்டப்படாத நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியானது.

இதற்கு பதில் நடவடிக்கையாக சீனா 60 பில்லியன் டொலர் அமெரிக்க இறக்குமதிகளுக்கு ஜுன் 1 ஆம் திகதி முதல் வரியை உயர்த்தியது.

கிளார்க்ஸ், கன்வேர்ஸ் உட்பட பாதணி நிறுவனங்கள் கையொப்பம் இட்ட இந்தக் கடிதத்தில், பாதணிகளுக்கான சராசரி வரி 11.3 வீதம் என்றும் சில காரணங்களால் அது 67.5 வீதமாக உயர்வதாக குறிப்பிட்டுள்ளது.

“25 வீத வரி அதிகரிப்பு காரணமாக உழைக்கும் அமெரிக்க குடும்பங்கள் தனது பாதணிக்காக 100 வீத வரி செலுத்த வேண்டி இருக்கும்” அந்த நிறுவனங்கள் எழுதி உள்ளன.

இதனிடையே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையைத் தொடரத் தயார் என்றாலும் அந்நாடு தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொள்வதாக சீனா குறை கூறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போரை நிறுத்துவதற்கான வர்த்தக ஒப்பந்தங்களைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் நிலைப்பாடு தெளிவாக இல்லை என்று அமெரிக்காவுக்கான சீனத் தூதர் சுய் டியேன்காய் தெரிவித்துள்ளார். “இது குறித்த முடிவை எட்ட எங்கள் அமெரிக்க சகாக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட சீனா இன்னமும் தயாராக உள்ளது. எங்கள் கதவுகள் திறந்தே இருக்கின்றன” என்று சுய் அமெரிக்க ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

மே மாதம் 10ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கையில் சீனா மீதான வர்த்தக வரியை அமெரிக்க உயர்த்தியதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை ஸ்தம்பித்தது.

“இரு தரப்பினரும் முன்னர் ஏற்றுக்கொண்ட வரைவு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா ஒரு முறைக்குப் பலமுறை திடீரென மனம் மாறி பின்வாங்கியது. ஒப்பந்தத்திற்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துவது அமெரிக்காதான் என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது” என்றார் அவர்.

Thu, 05/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை