மட்டு.ஷரீஆ பல்கலைக்கழகம்; பின்னணியில் இருப்பது என்ன?

சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும் - ஹக்கீம் விசாரணை நடத்த நடவடிக்கை - அமைச்சர் ருவான்

மட்டக்களப்பு ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை தீர்த்து உரிய முறைமைகளை முன்னெடுக்க வேண்டுமென நீர்ப்பாசன மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதேவேளை இந்த பல்கலைக்கழகம் தொடர்பில் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சர் ருவன் விஜேவர்தன கூறினார்.

வாய்மூல விடைக்காக ஹேசா விதாரண எம்.பி எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலளிக்கையிலே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.

இடையீட்டுக் கேள்வியொன்றை எழுப்பிய ஹேசா விதாரண எம்.பி,ஷரீஆ பல்கலைக்கழகத்தின் 500 மில்லியன் ரூபா பங்குகள் கிழக்கு ஆளுநரின் மகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஒருவரின் மகன் இவ்வாறு பங்குகள் வைத்திருப்பது பாதகமானது. அரசியல்வாதிகளுக்கு தேவையானவாறு சட்டங்களை மாற்ற முடியுமா? இந்தத் திட்டத்தை மக்கள் நிராகரிக்கிறார்கள். இந்தத் திட்டம் குறித்து விசாரணை நடத்தப்படுமா? என வினவினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ருவன் விஜேவர்தன,இது குறித்து விசாரணை நடத்த பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த பல்கலைக்கழகத்தை உயர்கல்வி அமைச்சின் கீ்ழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகம் குறித்து ஆராய வேண்டும். இதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்று தேட வேண்டியுள்ளது என்றார்.

இது தொடர்பில் உயர்கல்வி அமைச்சர் என்ன கூறுகிறார்? என பந்துல குணவர்தன எம்.பி வினவியதற்குப் பதிலளித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், பட்டம் வழங்கும் எந்த ஒரு நிறுவனத்திற்கும் அனுமதி வழங்குவதற்கு முன்னர் நீண்ட முறைமைகள் பின்பற்றப்படும். இது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. சபாநாயகரும் இது பற்றி தனிப்பட்ட முறையில் என்னுடன் பேசினார். சரியான முறையை பின்பற்றித்தான் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இந்தப் பல்கலைக்கழகம் தொடர்பான சந்தேகங்களை துடைத்து அடுத்த கட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். தேவையானால் அறிக்கையொன்றை வழங்க தயாராக இருக்கிறேன் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்.மகேஸ்வரன் பிரசாத்

Fri, 05/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை