ஜப்பானில் புதிய பேரரசர் பதவியேற்பு

ஜப்பானின் 126ஆவது பேரரசராக அகிஹிட்டோவின் மகன் நருஹிட்டோ அரியணை ஏறினார்.

30 ஆண்டுகள் பேரரசராக இருந்த 85 வயதான அகிஹிட்டோ வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக முடி துறப்பதாக அறிவித்தார். ஜப்பான் அரச வரலாற்றில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் முடி துறந்ததில்லை. நேற்று அவர் முடி துறக்கும் நிகழ்ச்சி இம்பீரியல் அரண்மனையில் நடைபெற்றது.

இதை அடுத்து மக்களிடம் உரையாற்றிய அகிஹிட்டோ, கடந்த 30 ஆண்டுகளில் தனது கடைமையை சரிவரச் செய்திருப்பதாகத் தெரிவித்தார். மக்கள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

தந்தை முடி துறந்த மறுநாள், அவரது மூத்த மகனான 59 வயதான நருஹிட்டோ, ஜப்பானின் புதிய பேரரசராக அரியணை ஏறினார். இந்த நிகழ்ச்சி, தலைநகர் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனையில் நேற்று நடைபெற்றது. அங்கு பிரதமர் சின்ஸோ அபே, அரச குடும்பத்தினர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில், நருஹிட்டோவுக்கு முடிசூட்டப்பட்டது.

மன்னருக்கான அரியணையும் நருஹிட்டோவிடம் ஒப்படைக்கப்பட்டது.

முடி சூடிய புதிய மன்னர் அரியணை ஏறிய பின்னர் முதன்முறையாக பேசுகையில், “அரசியலமைப்பின்படியே எனது செயல்பாடுகள் இருக்கும். மக்களின் எண்ணங்களுக்கேற்ப செயல்பட்டு, அவர்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன்.

நான் பொறுப்பேற்றிருக்கும் இந்த மிக முக்கியமான பதவியை நினைக்கும்போது, புத்துணர்ச்சி அடைந்ததாக உணர்கிறேன். என் முன்னோர்களின் பாதையில் பணியை தொடர்வேன்” என கூறினார்.

அவரது பதவிக்காலம் ரெய்வா என அழைக்கப்படுகிறது. ரெய்வா என்றால் ஜப்பான் மொழியில், நல்லிணக்கம் என்று பொருள்படும். புதிய மன்னர் முடி சூட்டு விழாவைத் தொடர்ந்து, ஜப்பானில் 10 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் அரசர்களுக்கு எந்தவித அரசியல் அதிகாரமும் இல்லை. ஆனால் அவர்கள் நாட்டின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றனர்.

Thu, 05/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை