உயிருடன் புதைந்துகிடந்த குழந்தையை மீட்ட நாய்

தாய்லந்தின் வடக்குப் பகுதியில் மண்ணுக்குள் உயிருடன் புதைந்துகிடந்த குழந்தையை ஒரு நாய் மீட்டுள்ளது.

பதின்ம வயது பெண் ஒருவருக்கு அந்தக் குழந்தை பிறந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

கர்ப்பமானது வெளியே தெரியக்கூடாது என்பதற்காகப் பிறந்த குழந்தையை மண்ணிற்குள் அவர் புதைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பேன் நாங் காம் என்ற குறித்த கிராமத்தில் பிங் பாங் என்ற அந்த நாய் குரைத்துக் கொண்டே மண்ணை தோண்டியுள்ளது.

இதை கவனித்த அந்த நாயின் உரிமையாளர் குழந்தையின் கால் ஒன்று மண்ணில் தெரிவதை கவனித்துள்ளார்.

உடனே உள்ளுர்வாசிகள் அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையை சுத்தம் செய்த மருத்துவர்கள் குழந்தை நலமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

கார் விபத்து ஒன்றுக்கு பின்னர் பிங் பாங்கின் கால்களில் ஒன்றை பயன்படுத்த முடியாமல் போனதாக அதன் உரிமையாளர் உசா நிசாய்கா தெரிவித்தார். “பிங் பாங் மிகவும் விசுவாசமாகவும், சொல்வதை கேட்டும் நடந்து கொள்ளும். நான் எனது கால்நடைகளை மேய்க்க செல்லும்போது பிங் பாங் எனக்கு உதவி செய்யும். கிராமத்தினர் அனைவரும் அவனை நேசிக்கின்றனர்.

அவன் அற்புதமானவன்” என்று அவர் மேலும் தெரிவிக்கிறார். சம்பவம் தொடர்பாக பதின்ம வயதுப் பெண் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். அந்த குழந்தையின் தாய் மீது, பச்சிளம் குழந்தையை கைவிடல் மற்றும் கொலை செய்ய முயற்சி செய்தல் ஆகிய குற்றங்கள் பதியப்பட்டுள்ளன.

Mon, 05/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை