தனியார் பல்கலை உரிமையாளரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும்

சவூதி புலனாய்வு பிரிவின் முகவரென குற்றச்சாட்டு

எதிர்காலத்தை திட்டமிட ஜூலையில் பௌத்த மாநாடு

சவூதி அரேபியாவின் புலனாய்வுப் பிரிவின் வஹாப் வாத முகவர்களாக செயற்படும் தெஹிவளையை தலைமையமாகக் கொண்ட தனியார் பல்கலைக்கழகத்தின் உரிமையாளர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். தெஹிவளை, கண்டி, குருநாகல் என பல பகுதிகளில் கிளைகளைக் கொண்ட இந்தத் தனியார் பல்கலைக்கழகம் 200 முஸ்லிம் இளைஞர்களை பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள அடிப்படைவாத அமைப்புக்களுடன் செயற்படுவதற்காக அனுப்பிவைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவருக்கு மத்திய கிழக்கு நாடுகளில் ஹோட்டல்கள் இருப்பதாகவும், இவருக்கு இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியொன்று இருப்பதாகவும் தகவல் வெளியிட்டார். இராஜகிரியவில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவல்களை ஊடகங்களுக்குப் பகிரங்கப்படுத்தினார்.

சவூதி அரேபியாவின் புலனாய்வுப் பிரிவின் வஹாப் வாத முகவர்களாக இந்தத் தனியார் பல்கலைக்கழகம் செயற்பட்டுள்ளது. கல்வி என்ற போர்வையில் பல முஸ்லிம் இளைஞர்கள் அடிப்படைவாத சிந்தனையுடன், வஹாப் வாதம் புகட்டப்பட்டு பல உலக நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள 200 இளைஞர்களும் போலியான பெயர்களில் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகத் தம்மிடம் தகவல்கள் உள்ளது என்றும் அவர் கூறினார். தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு உதவிய பொறியியலாளர்கள் இருவரும் காத்தான்குடியிலிருந்து அழைத்துவரப்பட்டு குறித்த பல்கலைக்கழகத்தினால் பயிற்சி அளிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வஹாப் வாத முகவர்களால் இலங்கையில் 3000இற்கும் அதிகமான முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. குறுகிய அறிவுறுத்தலில் ஒன்று சேரக்கூடிய நிலையில் அவர்கள் உள்ளனர். இவ்வாறான நிலையில் குறித்த தனியார் பல்கலைக்கழகத்தின் உரிமையாளரை அரசாங்கம் உடனடியாகக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதேநேரம், நாட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஜூலை மாதம் 7ஆம் திகதி 6 ஆயிரம் முதல் 7ஆயிரம் வரையான பௌத்த பிக்குமாரின் பங்களிப்புடன் மாநாடொன்றை நடத்தி தமது எதிர்காலத் திட்டத்தை பகிரங்கப்படுத்தவிருப்பதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டார். நாட்டில் அமைதியை ஏற்படுவதற்கு சகலரும் ஒன்றிணைய வேண்டும். நாட்டில் எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனைகளை இரண்டு வாரங்களில் முன்வைத்து தம்முடன் கலந்துரையாட முடியும். இதற்காக சகலரையும் அழைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் தலையிடாமல் இருந்தால் மதத் தலைவர்களால் பிரச்சினைகளுக்கு முடிவைக் கொண்டுவர முடியும். எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மாத்திரம் அரசியல்வாதிகள் தலையிட்டால் போதும். அதனைவிடுத்து ஒவ்வொரு அமைப்புக்களையும், குழுக்களையும் அமைத்துக் கொண்டு அரசியல் நோக்கத்தில் செயற்படுவது மக்களை ஏமாற்றுவதாகும்.

இவ்வாறான சூழ்நிலையில் ஒவ்வொரு அரசியல் வாதிகளைச் சந்திப்பதை மகாநாயக்க தேரர்கள் கைவிட வேண்டும். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் தனித்தனியாகச் சென்று அவர்களைச் சந்திக்கின்றனர். எந்தக் கட்சியாகவிருந்தாலும் தனித்தனியாக அரசியல்வாதிகளைச் சந்திக்காது கட்சித் தலைமை அல்லது செயற்குழுவை அழைத்து அவர்கள் எவ்வாறான நடவடிக்கைகள் தான் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை மகாநாயக்க தேரர்கள் அக்கட்சிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

Wed, 05/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை