சகல மக்களுக்கும் பொதுவான சட்டம்

சு.க.வின் மத்திய குழுவில் ஏக முடிவு

*திருமண வயதெல்லை 18

*சனத்தொகை கட்டுப்பாடு

*மதரீதியான பாடசாலைகளை மாற்றுதல்

*இன,மத கட்சிகளுக்குத் தடை

*குடிவரவு, குடியகல்வு சட்டத்தில் திருத்தம்

நாட்டிலுள்ள அனைத்து இன, மத மக்களும் பொதுவான சட்டமொன்றின் கீழ் செயற்படும் வகையில் பல சட்ட திருத்தங்களை முன்னெடுக்க சுதந்திரக் கட்சி மத்திய குழு முடிவு செய்துள்ளது. திருமண வயதெல்லையை 18 ஆக மட்டுப்படுத்துதல்,சனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தல்,இன முறுகல்களை ஏற்படுத்துவதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வருதல்,மத ரீதியான பாடசாலைகளை கலப்பு பாடசாலைகளாக மாற்றுதல்,இன, மத ரீதியான கட்சிகளை தடை செய்தல்,குடிவரவு, குடியகல்வு சட்டத்தில் திருத்தம் செய்தல் அடங்கலான பல யோசனைகள் இதன் போது ஆராயப்பட்டு அவற்றை 2 மாத காலத்தினுள் சட்டமாக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக சுதந்திரக் கட்சி செயலாளர் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர எம்.பி தெரிவித்தார்.

இந்த யோசனைகளுக்கு ஜனாதிபதி,பிரதமர்,எதிர்க்கட்சித் தலைவர்,கட்சித் தலைவர்கள்,மற்றும் மதத் தலைவர்களின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் இவற்றுடன் தொடர்புள்ள அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுடன் திருத்தங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,சுதந்திரக் கட்சி யோசனையாக அன்றி சகல தரப்பினரதும் யோசனையாக இதனை முன்னெடுக்க சகல கட்சித் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

சுதந்திரக் கட்சி மத்திய குழுக்கூட்டம் நேற்று முன்தினம் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது.இதன் போது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.முழு நாட்டிலும் ஒரே சட்டமே இருக்க வேண்டும். கடந்த காலத்தில் ஒவ்வொரு மதத்தினதும் அழுத்தம் காரணமாக தனித்தனியான சட்டம் தயாரிக்க இடமளிக்கப்பட்டது. சிறுபான்மைக்கு ஒரு சட்டம் பெரும்பான்மைக்கு ஒரு சட்டம் என தனித்தனி சட்டங்கள் இருக்க முடியாது. சகல இன, மத மக்களும் பொதுவான சட்டத்தையே பின்பற்ற வேண்டும் என்பது குறித்து இங்கு ஆராயப்பட்டது.

இது தொடர்பில் பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வை குழுவுக்கு சில யோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. மலித் ஜெயதிலக தலைமையிலான குழு அவை குறித்து ஆராய்ந்து வருகிறது.இந்த யோசனைகள் குறித்து சகல தரப்பினருடன் ​பேசி வருகிறோம்.

இன,மத இடையிலான மோதல்களை ஏற்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.இதற்காக சிங்கப்பூரில் இருப்பது போன்ற சட்டமொன்றை கொண்டுவர யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பௌத்த,இந்து.இஸ்லாமிய பாடசாலைகள் இருக்க முடியாது.கலப்பு பாடசாலைகளே நாட்டில் இருக்க வேண்டும்.தற்பொழுது உள்ள பாடசாலைகளில் வேறு இனத்தவர்களுக்கும் குறித்தளவு வீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.பாடசாலைகளில் நல்லிணக்கம் கற்பிக்கப்பட வேண்டும்.

வௌிநாடுகளில் இருந்து வரும் நபர்களுக்கு எமது நாட்டு கலாசாரம் பற்றி தெரியாது.இதற்காக சட்ட திருத்தம் செய்யப்பட வேண்டும்.

முகத்தை மறைக்கும் தலைக்கவசம்,புர்கா தொடர்பில் மதத் தலைவர்களுடன் பேசி உகந்த சட்டம் தயாரிக்க வேண்டும்

இன,மத ரீதியான கட்சிகளை தடை செய்யவும் தற்பொழுது இருக்கும் கட்சிகள் தொடர்பில் தேர்தல் ஆணையாளருடன் கலந்துரையாடி மாற்றம் செய்யவும் வேண்டும்.

ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியான அமைச்சுகள் அமைப்பதற்கு பதலாக தனியொரு மத விவகார அமைச்சை உருவாக்க வேண்டும்.இந்த அமைச்சு ஜனாதிபதியின் கீழ் இருக்க வேண்டும்.

குடிவரவு, குடியகல்வு சட்டத்தை திருத்த வேண்டும்.வேறு நாடுகளில் இருந்து வருவோரை கைது செய்தல் நாடுகடத்தல் மற்றும் மத போதகர்கள் தொடர்பில் இந்த சட்டத்தில் தௌிவாக கூறப்படவில்லை. இனவாத விரிவுரை வழங்க வருவோரினால் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படும்.வௌிநாடுகளில் இருந்து திருட்டு வழியில் வரும் நிதியை கட்டுப்படுத்த திருத்தம் செய்யப்பட வேண்டும்.

இது தவிர சமூக வலைத்தளங்களை மேற்பார்வை செய்ய வேண்டும்.இதற்காக முறைமையொன்று அவசியம்.

12.5 வீதமாக இருந்த பாராளுமன்ற தெரிவுக்கான வெட்டுப்புள்ளி 5 வீதமாக குறைக்கப்பட்டதால் இனவாத, மதவாத கட்சிகள் உருவாகும் நிலை ஏற்பட்டது.இது தொடர்பிலும் திட்டம் தயாரிக்க வேண்டும்.

இந்த யோசனைகளை சட்டமாக மத்திய குழு அனுமதி வழங்கியது.இதற்கு சகல கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தேவையான திருத்தங்கள் முன்னெடுப்பது குறித்த மலிக் ஜெயதிலக தலைமையிலான குழு சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் ஆராய்ந்து வருகிறது.

அரசாங்கம் எந்த கட்டத்தில் இதில் தலையீடு செய்ய வேண்டும் என பிரதமர் வினவியுள்ளார். சகல தரப்பினரதும் ஒத்துழைப்புடன் புதிய சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.(பா)

 

ஷம்ஸ் பாஹிம்

Wed, 05/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை