உலகில் எங்குமே பயங்கரவாதம் வெற்றி பெற்றது கிடையாது!

நான் இங்கு வருகை தருவதற்கு இரண்டு விடயங்கள் காரணமாக அமைந்தன. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற தாக்குதலினாலும் 26ஆம் திகதி இப்பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவத்தினாலும் மீண்டும் எல்.ரீ.ரீ.ஈ போர் சூழ்நிலை ஏற்படுமோ என்று நாட்டின் சாதாரண மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் இரண்டுவார காலங்களுக்குள் பாதுகாப்புத் துறையினரின் திறமையினால் மக்கள் மன ஆறுதல் அடைந்துள்ளனர். குறுகிய காலத்திற்குள் இத்தனை பயங்கரவாதிகளையும் வெடிபொருட்களையும் அளவுக்கதிகமான சொத்துகளையும் கைப்பற்றுவது அத்தனை சுலபமல்ல. பாதுகாப்புத் துறையினர் உயிரைப் பணயம் வைத்து அந்த செயலை ஆற்றியுள்ளார்கள்.

பயங்கரவாதிகளை பலவீனமடையச் செய்து, நாட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு உறுதுணையாக இருந்த முப்படையினருக்கும் பொலிசாருக்கும் புலனாய்வு பிரிவிற்கும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் உள்ளிட்ட ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அதிகாரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்தப் பிரதேசத்தில் அமைதியான சூழ்நிலை நிலவுவதாலேயே என்னால் இங்கு வர முடிந்தது.

இந்த பிரதேசத்தில் குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால் நான் இன்று இங்கு வருகை தந்திருக்க முடியாது. நான் வருவதற்கு ஆயத்தமானபோது பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நான் இங்கு வருவது சரியாக இருக்காது என்றும் நிலைமை சரியில்லை என்றும் கூறினார்கள். ஆனாலும் சுமுகமான சூழ்நிலை இருப்பதன் காரணமாகவே நீங்கள் இந்த இடத்தில் ஒன்றுதிரண்டிருக்கின்றீர்கள்.

இரண்டாவது விடயம் பாதுகா ப்புத் துறையினர் நாட்டை சுமுக நிலைக்கு கொண்டு வருவதைப் போன்றே அரச திணைக்கள பிரதானிகள், பாதுகாப்புத் துறையினருடன் நெருக்கமாக செயற்பட வேண்டியது அவசியமாகும். அரச அலுவலகங்களின் பிரதானிகளே பாதுகாப்புத்துறைக்கும் சாதாரண மக்களுக்கும் இடையில் இருப்பவர்கள் இந்த இரு தரப்பினரையும் ஒருங்கிணைப்பவர்களாக அரச அலுவலகங்கள், திணைக்கள உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர்கள், தவிசாளர்கள் போன்றோர் கருதப்படுகின்றனர். இந்த இடைப்பட்ட மக்களை நான் இங்கு ஒன்று திரட்டியதற்கான காரணம் இந்த இரண்டு வாரங்களுக்குள் நாம் அடைந்துள்ள வெற்றியை மேலும் மேம்படுத்தி பயங்கரவாதத்தை இல்லாதொழித்து அனைவரும் ஒன்றாக செயற்பட வேண்டும் என்பதனாலேயே ஆகும்.

உலகின் செல்வந்த நாடுகளாகிய அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, இங்கிலாந்து, மலேசியா, அவுஸ்திரேலியா, கனடா, இந்தோனேசியா, இந்தியா போன்ற நாடுகளிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர். பயங்கரவாத தாக்குதலின் காரணமாக மக்கள் மனதில் தோன்றும் அச்சம், சந்தேகம், நம்பிக்கையின்மை போன்ற விடயங்களுக்கு உலக நாடுகள் அனைத்தும் முகங்கொடுத்துள்ளன. எமக்கு 30 வருட கால போர் அனுபவம் உள்ளது.

எனக்கு முன்பு 5 ஜனாதிபதிகள் ஆட்சி புரிந்தனர். அவர்கள் ஐவரின் கால கட்டங்களிலும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. குண்டு வெடிப்பு சம்பவம் எனது ஆட்சி காலத்தில் புதிதாக தோன்றிய ஒரு சம்பவமல்ல. இதை நான் நேற்று பாராளுமன்றத்திலும் குறிப்பிட்டிருந்தேன். முப்பது ஆண்டு காலமாக இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் துப்பாக்கி சத்தத்துடனும் வெடிகுண்டு சத்தத்துடனுமே மக்கள் வாழ்ந்து வந்தார்கள்.

அந்த 30 ஆண்டுகளும் அவ்வாறே கழிந்தன. அதேபோன்று பல்வேறு இயற்கை அனர்த்தங்களுக்கும் நாம் முகங்கொடுத்துள்ளோம். 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப் பேரலையினால் கிழக்கு மாகாணத்தில் பாரிய சேதம் ஏற்பட்டது. அதற்கு முன்பு 78,79 காலப்பகுதியில் சூறாவளி காரணமாக கிழக்கு மாகாணத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டன. யுத்தம், சுனாமி, சூறாவளி, வெள்ளம் போன்ற அனர்த்தங்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு துறையினருக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி சாதாரண மக்களிடையே காணப்படும் அச்சம், சந்தேகம் மற்றும் நம்பிக்கையின்மையை இல்லாது ஒழிக்க வேண்டும். இந்தப் பிரதேசங்களில் அதிகளவிலான முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருவதால் நான் அறிந்த வகையில் பாரிய பிரச்சினைகள் இல்லை. ஆனால் சிறியளவிலான முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களில் சிங்கள மக்களினால் துன்புறுத்தல்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்துடனேயே முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் இருந்து பயங்கரவாதிகள் தம்மை துன்புறுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தில் சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அண்மையில் கொழும்பில் வசிக்கும் சில நண்பர்களின் வீடுகளுக்கு நான் சென்றிருந்தேன். அவர்களின் அச்சத்தை போக்குவதற்கே நான் அங்கு சென்றேன். சிங்கள, முஸ்லிம் ஆகிய தரப்பினரிடையே காணப்படும் அச்சத்தை இல்லாதொழிக்க வேண்டும். அதனூடாக நாம் தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலுவடையச் செய்ய வேண்டும். 150க்கும் குறைந்தளவிலான பயங்கரவாதிகளே உள்ளார்கள் என்று கடந்த இரண்டு வாரங்களாக நான் ஆற்றிய அனைத்து உரைகளிலும் குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் யார் என்பதை எமது பாதுகாப்புத் துறையினர் கண்டறிந்துள்ளார்கள்.

அதில் சிலர் தற்கொலை குண்டு தாக்குதலினால் மரணமடைந்துள்ளனர். மற்றும் சிலர் பாதுகாப்பு துறையினருடனான மோதலின்போது இறந்துள்ளனர். மேலும் அதிகளவான பயங்கரவாதிகளை நாம் கைது செய்துள்ளோம். இன்னும் 5 அல்லது 6 நபர்களையே கைது செய்ய வேண்டியுள்ளது. இலங்கைவாழ் முஸ்லிம்களை பயங்கரவாதிகளின் குவியலுக்குள் தள்ளிவிட வேண்டாம் என்று சிங்கள மற்றும் தமிழ் மக்களிடத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன். முஸ்லிம் மக்களின் மீது நம்பிக்கை வைத்து அனைத்து இனத்தவர்களும் ஒன்றாக வாழ வேண்டும். இந்த பிரச்சினையை காரணம் காட்டி நாம் பிளவுபட்டால், சந்தேக கண்ணோட்டத்துடன் செயற்பட்டால் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாத போர் போன்றே 25 வருட காலமாவது இந்த பயங்கரவாதம் முன்கொண்டு செல்லப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

முஸ்லிம் இளைஞர்களை இந்த பயங்கரவாத செயற்பாடுகளுக்குள் செல்ல விடாமல் தடுக்க வேண்டும். அதற்காகத்தான் முப்படையினர், பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் பயங்கரவாதிகளை ஒழித்து உங்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார்கள். பாதுகாப்புத் துறையினரால் அசௌகரியங்கள் ஏற்படுவதாக முஸ்லிம் மக்கள் முறைபாடுகளை முன்வைக்கவில்லை என்று ஆளுநர் தெரிவித்திருந்தார்.

கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி இங்கு தமிழ்மொழியில் உரையாற்றினார். அவர் தமிழ்மொழியில் உரையாற்றும்போது நான் உங்களின் முகங்களை நன்றாக பார்த்துக் கொண்டிருந்தேன். உங்களது முகத்தில் மாற்றம் ஏற்படுமென்று எனக்குத் தெரியும். அனைவரின் முகத்திலும் ஒரு புன்னகை மலர்ந்தது. என்னால் தமிழ்மொழியில் உரையாட முடியாததை எண்ணி நான் வருத்தமடைகின்றேன். என்னால் தமிழ்மொழியில் பேச முடிந்திருந்தால் நீங்கள் கட்டளை தளபதியின் உரையை செவிமடுத்ததைப் போன்றே எனது உரையையும் ஆர்வத்துடன் செவிமடுத்திருப்பீர்கள். கட்டளைத் தளபதி உரையாடும்போது உங்களது முகத்தில் உற்சாகம் ஏற்பட்டது ஏன் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அதுவே உங்களை நெருங்குவதற்கான முறை. இதுவே நல்லிணக்கத்திற்கான சைகைமொழி. இதுவே மனிதாபிமானம். நாம் இன, மத, மொழி, சாதி போன்றவற்றினால் பிளவுபட்டுள்ளோம்.

நீங்கள் பாதுகாப்பு படையினரோடு ஒத்துழைப்புடன் செயற்பட்டு மக்களுக்கு தெளிவை வழங்கி முஸ்லிம் இளைஞர்களை பாதுகாக்க வேண்டியது உங்களது பொறுப்பாகும். அவர்கள் பயங்கரவாதத்தின் பக்கம் செல்ல இடமளிக்காதிருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

நான் இந்த கூட்டத்தின் பின்னர் சுமார் 1,000 இளைஞர்களை சந்திக்க உள்ளேன். நான் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது இந்த பிரச்சினை பற்றி அவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே ஆகும். நான் அவர்களுடன் பிள்ளைகளிடம் பேசுவதைப் போன்று பேசவுள்ளேன். எனது பிள்ளைகளைப் போன்றே நாட்டின் அனைத்து பிள்ளைகளையும் நான் பார்க்கிறேன். சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்று நான் பேதம் பார்ப்பதில்லை. எனவே நாம் இத்தகைய பிரச்சினைகளின்போது பிரச்சினையை வளர்க்காது அதனை எப்படி முடிவுக்கு கொண்டு வரலாம் என்பதை பற்றியே சிந்திக்க வேண்டும்.

எல்.ரீ.ரீ.ஈ இயக்கம் ஏன் நீடித்தது? பிரபாகரனோடு சிறியதொரு பிரவினர் இணைந்தே அதனை ஆரம்பித்தார்கள். பிரபாகரனை நோக்கி தமிழ் இளைஞர்கள் ஈர்க்கப்படுவதற்கு காரணம் 1983இல் இடம்பெற்ற ஜூலை கலவரமாகும். ஜுலைக் கலவரத்தின்போது எல்.ரீ.ரீ.ஈ உடன் எந்தவித சம்பந்தமும் இல்லாத தமிழ், முஸ்லிம் மக்களின் வர்த்தகங்கள் அழிக்கப்பட்டன. கடைகள் எரிக்கப்பட்டன. பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

1983 கறுப்பு ஜூலையின் பின்னரே ஒரேயடியாக இளைஞர்கள் எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் பக்கம் விரைந்தார்கள். 1983 ஜூலைக் கலவரத்தின் பின்னர் தமிழ் மக்கள் வசதி வாய்ப்புடையவர்கள் பெரும் எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு சென்றனர். எஞ்சியவர்களுள் பெருமளவானவர்கள் எல்.ரீ.ரீ.ஈ உடன் சம்பந்தப்பட்டார்கள். ஏன் அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தில் இணைந்து கொண்டனர்? எவ்வித குற்றமும் இழைக்காதவர்களை குற்றவாளிகளைப் போன்று நடத்தியதே அதற்குக் காரணமாகும். அவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு, கடைகள் எரிக்கப்பட்டு தனிப்பட்ட ரீதியில் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துன்புறுத்தல்களே இதற்குக் காரணமாகும். கடந்த வாரம் நான் சர்வ சமய தலைவர்களை சந்தித்தேன்.

அப்போது முஸ்லிம் மதகுரு ஒருவர் பேசியதை நீங்கள் ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். அந்த இளம் மதகுரு 30 வருடங்கள் இந்த நாட்டில் யுத்தம் இடம்பெற்ற போதும் முஸ்லிம் மக்களுக்கு வீதியில் செல்வதற்கு பிரச்சினைகள் இருக்கவில்லை. நாங்கள் சோதனை செய்யப்படவுமில்லை. ஆனால் இந்த பிரச்சினையின் பின்னர் முஸ்லிம் என்றாலே எம்மை சந்தேகத்துடன் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனது பிள்ளைகள் சிங்கள பாடசாலையில் கல்வி கற்கின்றனர். இப்போது அப்பாடசாலைப் பிள்ளைகளும் எனது பிள்ளைகளை சந்தேகத்துடன் பார்க்கும் நிலை உருவாகி விட்டது என்று அவர் அழுதவாறே கூறினார்.

பயங்கரவாதம் உலகில் எங்குமே வெற்றி பெற்றது கிடையாது. பயங்கரவாதிகள் உலகின் பல முக்கிய நாடுகளின் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இறுதியில் பயங்கரவாதமே அழிவுற்றது. சுதந்திர சமூகமும் ஜனநாயகமுமே வெற்றி பெற்றது.

2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பின்லேடனின் அல்கைதா இயக்கம் உலக வர்த்தக கோபுரங்களை நொடிப்பொழுதில் தாக்கி சேதப்படுத்தியது. சுமார் 2,700க்கும் மேற்பட்டவர்கள் அவ்விடத்திலேயே பலியாகினர். அதனை அமெரிக்காவினால் தடுக்க முடியவில்லை. அவர்களது ராடர்களினாலும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பின் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இறுதியில் அல்கைதா அமைப்பும் பின்லேடனும் அழிந்து போயினர்.

உலகில் இன்றுள்ள எந்தவொரு பயங்கரவாத இயக்கத்திற்கும் நிலையான இருப்பு கிடையாது. உலகின் பலம் வாய்ந்த நாடுகள் அவற்றை அழிக்கின்றன. உலகில் எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் ஆயுதம் தயாரிப்பதில்லை. வேறு பிரிவினரே ஆயுதம் தயாரிக்கின்றனர். அவர்கள் ஆயுதம் தயாரிக்காவிட்டால் பயங்கரவாதம் கிடையாது. ஏனெனில் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் கிடைக்காது. எனவே நாம் இந்த இரண்டு பக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். பயங்கரவாதத்திற்கு நிலையான இருப்பு கிடையாது. அது அழிந்து போவது உறுதியாகும்.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவமும் 26ஆம்திகதி சாய்ந்தமருதில் இடம்பெற்ற சம்பவமும் இலங்கையின் பிரச்சினை மட்டுமல்ல. அது உலகளாவிய பிரச்சினையாகும். இது சர்வதேசத்துடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் பிரச்சினையாகும். உலகளாவிய பிரச்சினையொன்றை எப்படி இலங்கையிலிருந்து ஒழிப்பது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். தற்போது நாம் அதில் வெற்றி பெற்றுள்ளோம். எஞ்சியுள்ளவற்றை ஒழிப்பதற்கும் எமது பாதுகாப்பு படையினரும் பொலிஸாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். எனவே நாம் ஒற்றுமையுடனும் ஐக்கியத்துடனும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அச்சம், சந்தேகமின்றி வாழ்வதற்கு இப்பிரதேசத்திலுள்ள நிறுவனங்களின் தலைவர்கள், அதிபர்கள், நகர பிதாக்கள், பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகிய அனைவரும் இராணுவத்துடன் நட்புறவுடன் செயற்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் பின்பற்றும் உன்னதமான இஸ்லாம் மார்க்கம் அமைதியையே போதிக்கின்றது. பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய தத்துவங்கள் அனைத்தும் சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் மக்கள் நல்ல முறையில் வாழ்வதற்குமான வழியையே காட்டுகின்றன. இந்த சமய தத்துவங்களில் பயங்கரவாதத்திற்கு இடம் கிடையாது. இதனைத்தான் நாம் தெளிவுபடுத்த வேண்டும். எனவே மனிதர்கள் முன்னேற்றமடைவதற்கு முஸ்லிம்களுக்கு இஸ்லாமும் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்தவ சமயமும் பௌத்தர்களுக்கு பௌத்த தத்துவமும் இந்துக்களுக்கு இந்து தத்துவமும் வழிகாட்டுகின்றன. கல்வியைப் போன்று ஆன்மீகத்தையும் பெற்றுக்கொள்வது சிறப்பாக வாழ்வதற்கு முக்கியமானதாகும். பயங்கரவாதத்தில் இது கிடையாது. அங்கு அழிவும் கொடூர சிந்தனையுமே இருக்கின்றன.

எனவே எமது பிள்ளைகளுக்கு இந்த விடயங்களை நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். இது எம் அனைவரதும் நாடாகும். இங்கு சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்ற பேதம் கிடையாது. அனைத்து அழிவு நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டி முழு நாட்டையும் நல்ல நிலைக்கு கொண்டுவந்து, நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

முப்படையினர், பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு உற்சாகமளிப்பதற்காகவே நான் இன்று வருகை தந்தேன். அவர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள். ஏப்ரல் 26ஆம் திகதி நீங்கள் செய்தது ஒரு சிறிய விடயமல்ல. அதற்காக உயிரைப் பணயம் வைத்து ஒத்துழைப்பை வழங்கிய சிரேஷ்ட அதிகாரிகள் முதல் பாதுகாப்பு பிரிவிலுள்ள அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோன்று பாதுகாப்பு துறைக்கு ஒத்துழைப்பை வழங்கும் இப்பிரதேசத்திலுள்ள அரசாங்க அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், சமய தலைவர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது பாதுகாப்பு துறையை நாம் மென்மேலும் பலப்படுத்தி வருகிறோம். நாட்டின் புலனாய்வுத் துறையையும் பலப்படுத்தி வருகிறோம். பாதுகாப்புத் துறை, புலனாய்வுத் துறை மற்றும் பொலிஸாரின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்களினால் இந்த விடயங்களை சிறப்பாக செய்ய முடியும். வெளிநாட்டு படைகளின்றி எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்த பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ள முடியும்.

நான் பொலிஸ் திணைக்களத்தை முழுமையாக மறுசீரமைத்துள்ளேன். அதேபோன்று பாதுகாப்பு துறையிலும் மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எமது புதிய பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட திறமைவாய்ந்த முன்னாள் இராணுவ தளபதியும் புலனாய்வுத் துறை பணிப்பாளருமாவார். அதேபோன்று ஏனைய அனைத்து துறைகளிலும் மறுசீரமைப்பை நாம் செய்து வருகின்றோம். நீங்கள் அனைவரும் சந்தேகம், அச்சமின்றி மகிழ்ச்சியாக வாழக்கூடிய சுதந்திரமான ஒரு சமூகத்தை நாம் கட்டியெழுப்புவோம். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.

Sat, 05/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை