எந்த இனம், மதத்தவராக இருந்தாலும் பொதுச்சட்டத்திற்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும்

நாட்டில் எவரும் எந்த இனத்தை, மதத்தை அல்லது கலாசாரத்தை சேர்ந்தவராயினும் அனைவரும் பொது சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்றும் எவரும் சட்டத்தை மீறமுடியாது எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் சிறுகுழு காரணமாக அனைத்து முஸ்லிம் மக்களையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது என்றும் பெரும்பாலான முஸ்லிம்கள் அடிப்படை வாதத்திற்கு முரணானவர்கள் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அடிப்படை வாதிகளின் தேவைக்காக நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள், பெரும்பாலான முஸ்லிம் மக்கள் நிராகரிக்கும் சிறுவர் உரிமையை மீறும் வகையிலான திருமண நடைமுறைகள் போன்றவை தொடர்பில் சட்டங்களை கொண்டுவர பாராளுமன்றம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

இதற்கிணங்க தற்போது நாட்டுக்கு பொருத்தமில்லாத புர்கா போன்றவற்றை தடை செய்வதற்கும் முஸ்லிம் சமூகம் சட்ட ரீதியான வேண்டுகோளை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு 7ல் உள்ள பொறுப்பாளர் நிதியம் திணைக்களத்தில் இடம்பெற்ற டி.பி. ஜயதிலக்க நினைவஞ்சலி கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல் மற்றும் அதன் பின்னர் மூன்று வாரங்களுக்கு பின் முஸ்லிம் மக்களை இலக்காக வைத்து மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் ஆகியவற்றை மனித நேயமுள்ள எவரும் நிராகரிப்பர். வரலாற்றில் சுதந்திரம் பெற்றபோது ஜப்பானுக்கு சமமான நிலையில் இருந்த நாம் தற்போது கண்டுள்ள பின்னடைவுக்குக் காரணம் நாட்டின் சமாதானத்திற்குத் தடையாய் அமைந்த சக்திகளே. அதில் தவறான கொள்கைகளைக் கடைப்பிடிக்க அரசியல்வாதிகளும் காரணமாகினர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

 

 

Wed, 05/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை