இல்லாத பிசாசை உருவாக்க எதிரணி முயற்சி

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பயங்கரவாதிகளுக்கு நிவாரணப் பொதியல்ல

பூகோள பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இந்த வருடத்தினுள் நிறைவேற்ற வேண்டும்.இதிலுள்ள சரத்துகள் தொடர்பில் மாறுபட்ட கருத்து இருந்தால் அவை குறித்து ஆராயத் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். எதிரணி கூறுவது போன்று இந்த சட்டமூலம் பயங்கரவாதிகளுக்கு நிவாரணப் பொதியோ பிசா​ேசா அல்ல என்று குறிப்பிட்ட அவர், உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடனே புதிய சட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின் போது ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்குப்

பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர் மேலும் கூறியதாவது,

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தின் 2,3,4 ஆம் சரத்துகள் அவசியம், 2014 இல் வந்த குழு தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது. இவர்கள் சட்டத்தை மீறி செயற்பட்டதாக எந்த தகவலும் கிடையாது. ஆனால், இவர்கள் பிரிவினைவாத கருத்துகள் முன்வைத்ததாக தகவல் உள்ளது. திகன வன்முறையின் போது இவர்கள் செயற்படுகிறார்களா என அவதானித்தாலும் எதுவும் நடக்கவில்லை.சிரியாவுக்கு சென்று பயிற்சி பெற்று வந்தவர்கள் குறித்து புலனாய்வுப் பிரிவு அறிந்திருந்தது. இவர்களை அவசர காலச்சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும். இந்தக் குழுவில் சிலர் பிரிவினைவாத கருத்துகள் முன்வைத்தாலும் ஏனையோர் அவ்வாறு கூட நடந்து கொண்டிருக்கவில்லை. ஈரான், ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற நாடுகளுக்கு சென்று இவர்கள் பயிற்சி பெற்றதாக தகவல் கிடையாது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து துறைசார் மேற்பார்வை குழுவில் ஆராயப்பட்டது.இதில் எதிரணி பிரதிநிதிகள் பங்கேற்று கருத்து முன்வைத்தார்கள்.

சிலர் சிரியா சென்று பயிற்சி பெற்று வந்ததாக இதற்கு முன்னர் கூறப்பட்டது. யாரும் சட்டத்தை மீறாவிட்டால் கைது செய்ய முடியாது.

இங்கிலாத்தில் 13 சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், இங்கு அவ்வாறான சட்டம் கிடையாது.

சிரியாவிற்கு சென்று பயிற்சிபெற்று வந்த விடயம் ரகசியமல்ல.இந்த தாக்குதல் சதி இந்த வருடம் தான் மேற்கொள்ளப்பட்டது.இது தொடர்பில் அமைச்சர் கபீர் ஹாசிம் முதலில் வெளியிட்டிருந்தார்.

மேற்பார்வை குழுவில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து அறிக்கை பெற்று முன்வைக்க முடியும்.மனித உரிமை சட்டத்திற்கு அப்பால் சென்று இந்த சட்டம் முன்னெடுக்க முடியாது.

தற்பொழுதுள்ள சட்டம் போதுமானதல்ல மேலும் பலப்படுத்த வேண்டும் என கோரப்பட்டது. உச்ச நீதிமன்ற அனுமதியுடனே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

1975இல் துரையப்பா கொலையுடன் பயங்கரவாதத்தை தடுக்க சட்டம் இருக்கவில்லை.1979 இல் பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.இலங்கையினுள் நடைபெறும் குற்றங்களை தடுக்க இந்த சட்டம் போதுமானதாக இருந்தது. ஆனால், பூகோள பயங்கரவாத தாக்குதல்களையடுத்து பயங்கரவாதிகளுக்கு எதிராக செயற்பட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவருவதற்கு 2016 இல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை இந்த வருடத்தினுள் நிறைவேற்ற வேண்டும். ஒக்டோபர் 26 சதி மற்றும் பிரச்சினைகளினால் இது தாமதமானது.பூகோள பயங்கரவாதத்தை தடுக்க இலங்கையில் சட்டம் தேவை. வெளிநாட்டில் முன்னெடுக்கப்படும் பயங்கரவாதம் தொடர்பில் செயற்பட சட்டம் அவசியமாகிறது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் எதிரணி கூறுவது போன்று நிவாரண பொதியல்ல.ஆனால், பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் தலைவராக வந்த கே.பிக்கு யார் உதவி செய்தார்கள்.இல்லாத பிசாசை உருவாக்க எதிரணி முயல்கிறது. அரசியல் இலாபம் பெறாமல் தற்பொழுது உள்ள சட்ட கட்டமைப்பை பலப்படுத்த சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.வன்முறையையும் அடிப்படைவாதத்தையும் தடைசெய்ய வேண்டும்.

அதற்கு நாம் தயார்.அடிப்படைவாதத்திற்கும் வன்முறைக்கும் எதிராக மேலும் சட்டங்கள் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

 

Thu, 05/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை