ஆஸி. நாணயத்தாளில் எழுத்துப்பிழை

அவுஸ்திரேலியாவின் 50 டொலர் நாணயத்தாளில் ஓர் எழுத்துப் பிழை ஏற்பட்டிருப்பது அந்நாட்டு அதிகாரிகளைப் பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

மஞ்சள், பச்சை வண்ணமுடைய அந்த 50 டொலர் நாணயத்தாள் கடந்த ஒக்டோபரில் புழக்கத்துக்கு வந்தது.

அந்தப் நாணயத்தாளில் மேம்பட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அத்துடன், அவுஸ்திரேலியாவின் முதல் பெண் பாராளுமன்ற உறுப்பினர் எடித் கோவனின் பேச்சும் நுணுக்கமாக அச்சிடப்பட்டுள்ளது. என்றாலும், அதில் கவனக்குறைவாக இடம் பெற்றுள்ள ஓர் எழுத்துப் பிழை இப்போது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

1921 ஆம் ஆண்டு எடித் கோவன் பாராளுமன்றத்தில் ஆற்றிய கன்னி உரையில், ‘ரெஸ்பொன்ஸிபிலிடி’ என்ற ஆங்கில வார்த்தையைக் குறிப்பிட்டிருந்தார். நாணத்தாளில் அச்சிடும்போது அந்த வார்த்தையில் ‘ஐ’ தவறுதலாக விடுபட்டு விட்டது.

வெற்றுக் கண்களால் பார்க்கும் போது அந்தத் தவறை எளிதில் அறிய முடியாது. ஆனால், அவுஸ்திரேலிய வானொலியின் ஒரு நேயர் அந்தத் தவறை அம்பலப்படுத்திவிட்டார்.

என்றாலும், பிழையாக அச்சிடப்பட்ட அந்த நாணயத்தாள்களை புழக்கத்திலிருந்து மீட்டுக் கொள்ளும் திட்டம் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது.

எழுத்துப் பிழை பற்றி அறிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய மத்திய வங்கி, அடுத்த முறை நாணயத்தாள்களை அச்சிடும்போது தவறு திருத்திக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளது.

அவுஸ்திரேலிய அரசியல் வரலாற்றில் எடித் கோவனுக்கு முக்கிய இடம் உண்டு. அவர், தம் 60 ஆவது வயதில் பாராளுமன்ற உறுப்பினரானார்.

சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்கள் பணியாற்றும் சூழலை ஏற்படுத்துவதற்கு நல்ல ஆரம்பத்தை அமைத்துக் கொடுத்தவர் எடித் கோவன் ஆவார்.

Fri, 05/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை