பாடசாலைகளுக்கு போதிய பாதுகாப்பு

SUG

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் சோதனை நடவடிக்கைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் (05) பூர்த்தி செய்யப்பட்டதோடு, பாடசாலைகளில் பாதுகாப்புக் கடமைகளுக்காக பாதுகாப்பு அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07) நிலையியற் கட்டளை (27) 2 இன் பிரகாரம் ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் 95 வீதமான பாடசாலைகளில் சுற்று மதிலோ அல்லது வேலியோ இல்லை என்பதோடு, 25 வீதமான பாடசாலைகளில் காவலர்கள் இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

இவ்விவகாரம் தொடர்பாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 'பாதுகாப்புக் கவுன்ஸில் மற்றும் புலனாய்வுத் துறையினரின் அறிக்கைகளை கவனத்திற்கொண்டு, பாடசாலைகளுக்கு போதியளவான பாதுகாப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது.

நேற்றுமுன்தினம் (06) திங்கட்கிழமை பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிகவும் குறைந்து  காணப்பட்டது. இந்நிலையில், நேற்று (07)  பல இடங்களிலுள்ள பாடசாலைகளில்   மாணவர்களின் வரவு 2மடங்காகக் காணப்பட்டது.

ஆனால், கொழும்பிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைந்து காணப்பட்டது' என்றார். 

'ஊவா மாகாணத்தில் நேற்று முன்தினம் (06) திங்கட்கிழமை 20 வீதமாகக் காணப்பட்ட மாணவர்களின் வரவு, நேற்று (07) 40 வீதமாக அதிகரித்துக் காணப்பட்டது. எவ்வாறாயினும், மாணவர்களின் வரவு நிச்சயமாக அதிகரிக்கும்' எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார். 

Wed, 05/08/2019 - 11:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை