பயங்கரவாதிக்கு மரண தண்டனை; காலத்திற்கேற்ப சட்டத்தில் மாற்றம்

பயங்கரவாதத்தை

எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைப்பு கோருகிறது அரசு

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை வழங்கும், உச்ச பட்ச தண்டனையை எதிர்க்கட்சித் தலைவரும் எதிரணியினரும் ஏன் எதிர்க்கின்றனரென சபை முதல்வரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல கேள்வியெழுப்பினார்.

40 வருடங்கள் பழைமையான இந்த சட்டம் தற்காலத்திற்கு உகந்தவாறு தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், பயங்கரவாதத்தை ஒடுக்க பல முக்கிய சரத்துகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அவரது அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டில் புதிய சட்டம் தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, வட அயர்லாந்து பிரச்சினை காரணமாக 1974 இல் பிரித்தானியா பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டுவந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டே 1979 இல் இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பிரித்தானியா இதுவரை 10 தடவை சட்டத்தில் திருத்தம் செய்து தற்காலத்திற்கு உகந்தவாறு மாற்றம் செய்தது. ஆனால் 40 வருடங்கள்

கடந்தும் இலங்கையில் இந்தச் சட்டம் ஒரு தடவை கூட மாற்றப்படவில்லை. அன்றிருந்ததை விட பயங்கரவாதத்தின் போக்கு மாறியுள்ளது. பூகோள பயங்கரவாதம் சகல நாடுகளிலும் பரவியுள்ளது.இந்த நிலையில் சகல நாடுகளும் பயங்கரவாத சட்டத்தில் மாற்றம் செய்துள்ளன.

தற்காலத்திற்கு உகந்தவாறு மாற்றம் செய்வதற்காகவே புதிய சட்டம் தயாரிக்கப்பட் டுள்ளது.

ஒன்றரை மாதத்திற்கு முன்னர் இது தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போது எதிர்க்கட்சித் தலைவர் ஆதரவு தெரிவித்தார். ஆனால், இன்று அதனை எதிர்க்கிறார். பூகோள பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு சட்டம் தேவையில்லை என்கிறாரா?

சரீஆ சட்டம், கிழக்கில் புதிய பல்கலைக்கழகம் அமைக்க அனுமதி என்பன இவரே வழங்கியிருந்தார்.

புதிய சட்டமூலத்தில் முக்கிய பல அம்சங்கள் இருக்கின்றன.அவற்றை வாசிக்காமல் தான் எதிரணி இதனை எதிர்க்கிறது.

கொலைகளுடன் தொடர்புள்ள ஒருவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்கு தொடர்ந்தாலும் அவருக்கு மரண தண்டனை வழங்க முடியாது. புதிய சட்ட மூலத்தில் மரண தண்டனை வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

புதிய சட்டமூலம் உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட போது இதில் திருத்தங்கள் செய்யுமாறு யோசனை முன்வைக்கப்பட்டது. மரண தண்டனை வழங்கும் வகையில் திருத்தம் செய்யுமாறு உச்ச நீதிமன்றமே கோரியது.

பயங்கரவாதிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்குவதை எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கிறாரா?

புதிய சட்டத்தின் கீழ் இராணுவத்தினருக்கு சந்தேக நபர்களை கைது செய்ய முடியாது. ஆனால், அவர்களுக்கும் பயங்கரவாதிகளை கைது செய்யும் வகையில் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பூகோள பயங்கரவாதத்துடன் தொடர்புள்ள வேறு நாட்டவர்களுக்கும் எதிராக புதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

புதிய சட்டமூலத்தினூடாக ஊடகங்களை கட்டுப்படுத்தவோ தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தடுக்கவோ எந்தச் சரத்தும் உள்ளடக்கப்படவில்லை.நாம் ஆட்சியில் நீடிப்பதற்காகவோ எதிர்க்கட்சியை முடக்கவோ இந்த சட்டம் தயாரிக்கவில்லை.

பயங்கரவாதிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பது தான் எமது நோக்கமாகும். ஒருவர் கொலை செய்தால், அரசியலமைப்பின் பிரகாரம் அவருக்கு மரணதண்டனை வழங்க வேண்டும். அதற்கமையவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலத்தினூடாக ஊடகங்களுக்கோ தொழிற்சங்கங்களுக்கோ பாதிப்பு இருக்குமானால், உச்ச நீதிமன்றம் அதனைச் சுட்டிக் காட்டியிருக்கும்.

எனவே, இந்த சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோருகிறோம். இதிலுள்ள சரத்துகள் தொடர்பாக ஆராய அரசு தயாராக இருக்கிறது. தெரிவுக் குழு அமைப்பதால் மேலும் 3,4 மாத காலம் இழுத்தடிக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.(பா)

-ஷம்ஸ் பாஹிம்

Tue, 05/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை