தகவல் தொழில்நுட்ப அச்சுறுத்தல்: அமெரிக்காவில் அவசர நிலை

ஹுவாவி உற்பத்திகள் இலக்கு

வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து அமெரிக்க கணினி வலையமைப்பை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேசிய அவசர நிலை ஒன்றை பிரகடனம் செய்துள்ளார்.

அவர் இந்த நிறைவேற்று ஆணையில் கைச்சாத்திட்டதன் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து என நம்பப்படும் வெளிநாட்டுத் தொலைத்தொடர்புகளை பயன்படுத்த அமெரிக்க நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவில் எந்த நிறுவனத்தையும் குறிப்பிட்டுக் கூறாதபோதும் சீனாவின் ஹுவாவி நிறுவனம் இலக்குவைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன், ஹுவாவி மற்றும் அதனுடன் தொடர்புடைய 70 நிறுவனங்களை அதற்கான பட்டியலில் அமெரிக்க வர்த்தக துறை இணைத்துள்ளது. இதன் மூலம், அமெரிக்க அரசின் சிறப்பு அனுமதியைப் பெறாமல், ஹுவாவி நிறுவனம் அமெரிக்க தொழில்நுட்பங்கள், கருவிகள், பாகங்களை வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. ஹுவாவி உற்பத்திகளை சீனா உளவு பார்க்க பயன்படுத்தும் என்று அமெரிக்கா தலைமையில் பல நாடுகளும் அண்மைய மாதங்களில் எச்சரிக்கை விடுத்து வந்தன.

ஹுவாவியின் அடுத்த தலைமுறை 5ஜி மொபைல் வலையமைப்பை தவிர்க்கும்படி அமெரிக்கா தனது கூட்டணி நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

எனினும் தமது பணிகளில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் சீன அரசாங்கத்திடம் இருந்து சுதந்திரமாக இயங்குவதாகவும் ஹுவாவி பதிலளித்துள்ளது.

“அமெரிக்காவில் வர்த்தகத்தில் ஈடுபட ஹுவாவிக்கு விடுக்கும் கட்டுப்பாடுகள் மூலம் அமெரிக்கா மேலும் பாதுகாப்பானதாக வலுவானதாக மாற முடியாது” என்று அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும் அமெரிக்காவின் தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பக் கட்டமைப்பு, சேவைகள் ஆகியவற்றின் பலவீனங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி புதிய பலவீனங்களை உருவாக்கி வரும் எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதே டிரம்பின் உத்தரவின் நோக்கம் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

டிரம்பின் முடிவை வரவேற்ற மத்திய தொடர்பு ஆணையத்தின் தலைவர் அஜித் பை, “அமெரிக்காவின் கட்டமைப்புகளைக் கட்டிக்காக்க இது முக்கியமான படி” என்று தெரிவித்துள்ளார். ஆனால் இந்நடவடிக்கை தொடர்பில் சீனாவின் எதிர்வினை எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த அச்சத்தில் உலக வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் உள்ளனர்.

முன்னதாக ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்த நிலையில் அதை மீறி அந்நாட்டுக்கு உதவி செய்ததாக ஹுவாவி நிறுவன தலைமை நிதி அதிகாரி மெங் வாங்சோவை அமெரிக்கா கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக அவர் கனடாவில் கைது செய்யபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2016ஆம் ஆண்டில் ஜனாதிபதி பதவியை ஏற்றதற்கு முன்னரே சீனாவின் வர்த்தகச் செயல்பாடுகளைப் பற்றி குறைகூறி வந்த டிரம்ப், கடந்த வாரம் 200 பில்லியன் டொலர் மதிப்பிலான சீன இறக்குமதிகள் மீதான வர்த்தக வரிகளைக் கிட்டத்தட்ட இரட்டிப்பாக உயர்த்தினார்.

இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் டிரம்ப் திடீரென இதனைச் செய்தது சீனாவுக்குப் பெரும் காட்டத்தை ஏற்படுத்தியது. பதிலுக்கு சீனாவும் அமெரிக்க இறக்குமதிகள் சிலவற்றின் மீதான வர்த்தக வரியை உயர்த்தியது.

ஜப்பானில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை வரும் ‘ஜி20’ உச்சநிலைக்கூட்டத்தில் தாம் சந்திக்கக்கூடும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Fri, 05/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை