தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க மகத்தான வெற்றி

30ஆம் திகதி பதவியேற்பு வைபவம்

உலகத் தலைவர்களுக்கு அழைப்பு

நடந்து முடிந்த இந்தியப் பொதுத்தேர்தலில் 300இற்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றித் தனிப்பெருங்கட்சியாகத் திகழும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான நரேந்திர மோடி, எதிர்வரும் 30ஆம் திகதி இரண்டாவது முறையாகவும் பிரதமராகப் பதவியேற்கிறார்.

பதவியேற்பு வைபவத்தை மிகப்பிரமாண்டமாக சர்வதேச மட்டத்தில் நடத்துவதற்குப் பாரதிய ஜனதாக கட்சி ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மன், அமெரிக்கா, இலங்கை உட்படப் பல உலகத்தலைவர்களை அழைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக பாஜக தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று மாலை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் ​கோவிந்தை சந்தித்துப் பேசிய பிரதமர், கட்சி முக்கியஸ்தர்களுடன் மந்திராலோசனை நடத்தியதாகவும் தெரியவருகிறது.

பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ள வெற்றியின் மூலம், பிரதமர் மோடி தலைமையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவை சகல வளமும் நிறைந்த தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றியமைக்கவும் இந்தியா சுதந்திரமடைந்து 75ஆண்டுகள் நிறைவடையும் 2022 ஆம் ஆண்டில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவை நனவாக்குவதற்கும் திடசங்கற்பம் பூண்டிருப்பதாக பாரதிய ஜனதாக கட்சி நேற்று மாலை விடுத்த ஊடக அறிக்ைகயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதல்முறை;

ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்திக்கு பின் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியைச் சேர்ந்த நபர் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்பது இதுவே இந்திய வரலாற்றில் முதல் முறையாகும்.

பிரதமர் மோடியுடனே அவரது அமைச்சரவையும் பதவியேற்கும் என கூறப்படுகிறது. பாஜக கூட்டணியின் பிரமாண்ட வெற்றியை அக்கட்சித் தொண்டர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். எதிர்வரும் 28ஆம் திகதி காசி செல்லும் பிரதமர் மோடி 30 ஆம் திகதி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமருகிறார்.

தென்னிந்தியாவில் சொல்லிக்கொள்ளும்படி பாஜக கூட்டணி சோபிக்காவிட்டாலும் வட மாநிலங்களில் பாஜகவுக்கு வாரி வழங்கியுள்ளனர். குறிப்பாக மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பெரும்பாலான இடங்களை பாஜக சொந்தமாக்கியுள்ளது.

இதனிடையே, பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த விஷயம் குறித்து இப்போது எதுவும் கூற இயலாது. பிரதமர் அலுவலகம் முடிவு செய்த பின்னர், அடுத்த சில நாட்களில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார்.

பதவி விழாவை பிரம்மாண்டமாக நடத்தவும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, உலக அரங்கில் தன்னை வலுவான தலைவராக முன்னிறுத்தவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பெறுவதற்கு அழுத்தம் கொடுக்கும் வாய்ப்பாகவும் பிரதமர் மோடி கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டு நடந்த பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மகாராஷ்டிராவில் பாஜக 23 தொகுதிகளிலும், பீகாரில் 16 தொகுதிகளிலும் வென்று அதிக அளவு வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது.

நமது நிருபர்

 

 

Sat, 05/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை