ஜனாதிபதிக்குள்ள மதிப்பை பொறுக்க முடியாதவர்கள் சேறு பூச முயற்சி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்கள் மத்தியில் மதிக்கத்தக்கவராகவும், பிரபல்யமானவராகவும் மாறிவருவதை பொறுத்துக் கொள்ள முடியாத ஐக்கிய தேசியக் கட்சி அவர்மீது சேறு பூசுவதற்கே உண்மைக்குப் புறம்பான விடயங்களுடன் கூடிய கடிதங்களை

பௌத்த விகாரகைகளுக்கு அனுப்ப முற்பட்டுள்ளது. இந்தச் செயற்பாட்டின் பின்புலத்தில் லக்ஷ்மன் கிரியல்ல மாத்திரமல்ல பாரிய அரசியல் நிகழ்ச்சி நிரலொன்றும் உள்ளதென சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தெரிவித்தது.

அத்துடன், பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் அரசு விரைந்து செயற்பட்டிராதக் குற்றச்சாட்டுகளை முழுமையாக ஜனாதிபதி மீது சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ளும் ஒரு செயற்பாடாகவும் இது அமைந்துள்ளது என்றும் அக்கட்சித் கூறியது.

கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே சு.கவின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் தெரிவித்ததாவது, ‘கொழும்பு டெலிக்கிராப்’ என்ற இணையம் உண்மைக்குப் புறம்பான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. அதில் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி கடந்த மாதம் 11ஆம் திகதியே அறிந்துள்ளதாகவும், வெளிநாட்டு புலனாய்வுத்துறையினர் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தாகவும் கூறப்பட்டுள்ளதுடன், பிரதி பொலிஸ் மாஅதிபர் ஜனாதிபதிக்கு இது தொடர்பில் முன்னறிவிப்பை வழங்கியிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் பொய்யான விடயம். குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அந்த செய்தியில் எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஒரு புலனாய்வு செய்தி தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கும் பொறிமுறையொன்று உள்ளது.

‘கொழும்பு டெலிக்கிராம்’ வெளியிட்டிருந்த செய்தியை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர்கள் கடிதங்களாக தயாரித்து 640 பௌத்த விகாரைக்கு அனுப்புவதற்கு வைத்திருந்த நிலையில் பொலிஸார் அதனைக் கைப்பற்றியுள்ளனர். தேசியப் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு உட்பட நாட்டு மக்கள் நலன்சார் பல விடயங்களில் ஜனாதிபதி எடுத்துவரும் அதிரடியான தீர்மானங்களை பொறுத்துக்கொள்ள முடியாமலே அவர்மீது சேறு பூசுவதற்காக அமைச்சர் கிரியெல்ல இவ்வாறு செயற்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 4ஆம் திகதியே பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு எச்சரிக்கை கிடைத்திருந்ததாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். தகவல்களை அறிந்துகொண்டிருந்தால் நீங்கள் ஏன் ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும் அறிவிக்காது இருந்தீர்களென நான் பாராளுமன்றில் அவரிடம், கேள்வியெழுப்பியிருந்தேன். ஜனாதிபதிமீது முழுயான குற்றச்சாட்டை சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ளும் முகமாகவே இவ்வாறு சேறு பூச முற்படுகின்றனர். நீண்டகாலமாக பயங்கரவாதிகள் செயற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

 கடந்த நான்கு மாதகாலமாக மாத்திரம்தான் சட்டம், ஒழுங்கு அமைச்சுக்கு பொறுபானவராக ஜனாதிபதி உள்ளார். 2015ஆம் ஆண்டு முதல் ஐ.தே.க. வசமே சட்டம் ஒழுங்கு அமைச்சு இருந்தது. அவ்வாறெனின் பயங்கரவாதிகள் தொடர்பில் அறிந்தும் ஐ.தே.க. நடவடிக்கை எடுக்கவில்லையா?. இவர்களை எவ்வாறு பாதுகாப்புச் சபைக்கு அழைப்பது?. பாதுகாப்புச் சபையில் கலந்துரையாடப்படும் விடயங்கள் மறுநாள் பத்திரிகைகளில் செய்திகளாக வெளிவருகின்றன.

கடந்த 21ஆம் திகதி குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றது முதல் மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறாத வண்ணம் பல முக்கிய தீர்மானங்களை ஜனாதிபதி எடுத்துள்ளார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Sat, 05/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை