இன விரிசல் செயற்பாடு குறித்து ரிஷாத் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

இன விரிசல் செயற்பாடு குறித்து ரிஷாத் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு-Rishad Explain About Kuliyapitiya Clash

- முஸ்லிம்கள் திட்டமிட்ட குறி வைப்பு
- ஒரு சில ஊடகங்கள் பொறுப்பின்றி செயற்பாடு

சமூகங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் சில செயற்பாடுகள் முன்னடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று இரவு (12) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த விடயத்தை தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்;

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அசம்பாவிதங்களின் பின்னர் முஸ்லிம்களைத் திட்டமிட்டுக் குறிவைக்கும் வகையில் சில சக்திகள் செயற் படுகின்றன. கடந்த காலங்களில் திகன, கண்டி, அம்பாறை, உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்ததாலே என்னையும் இவர்கள் விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர். சமூகத்திற்கு எதிரான அநீதிகளைத் தட்டிக் கேட்கும் பொறுப்புக்களிலிருந்து என்னால் விலகிச் செயற்படமுடியாது. அதே போல எமது தாய்நாட்டுக்கு எதிராகச் செயற்படும் எந்தச் சக்திகளையும் பூண்டோடு அழிப்பதற்கு எனது முஸ்லிம் சமூகம் தாயாரகவுள்ளது.

இந்நிலையில் நாட்டைக் கொதி நிலையில் வைத்துக் கொண்டு மக்களை குறிப்பாக முஸ்லிம்களை அச்சுறுத்தும் வகையிலே சில ஊடகங்களும்,ஒரு சில பௌத்த தேரர்களும் செய்திகளையும் கருத்துக்களையும் வெளியிடுகின்றமை கவலையளிக்கிறது. இந்த செயற்பாடு தொடர்ந்தால் இன மோதல்கள் ஏற்படலாமென நாம் அஞ்சுகின்றோம்.

இனங்களுக்கிடையிலான பதற்றத்தைத் தணித்து ஐக்கியத்தை உருவாக்கவே, நாம் முயற்சிக்கின்றோம். சட்டத்தை ஒரு சிலர் கையிலெடுப்பதற்கு அனுமதிக்க முடியாது. அரசாங்கம் இது தொடர்பில் அவசரமாகக் கவனமெடுக்க வேண்டும்.பொறுப்பின்றிச் செயற்படும் சில ஊடகங்களின் பிரச்சாரங்களால் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக அமைதியாகவும் தேசப்பற்றுடனும் வாழும் முஸ்லிம்கள் அச்சமுற்றுள்ளனர். இவர்களின் அச்சத்தைப் போக்குவதும் இன்றைய தேவையாகவுள்ளது.

அப்பாவிகளைக் கொல்லும் காடையர்களுக்குப் பின்னால் முஸ்லீம் சமூகம் ஒரு போதும் சென்று விடாது. பயங்கரத்தின் பிடியிலிருந்து நாட்டை அவசரமாக விடுவிப்பது அனைவரதும் பொறுப்பாகும். இதற்கு முஸ்லிம் சமூகம் முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்றும் தெரிவித்தார்.


சிலாபம், குளியாப்பிட்டி வன்முறைகள் குறித்து ரிஷாத், அகில ஜனாதிபதியிடம் எடுத்துரைப்பு

சிலாபம் மற்றும் குளியாப்பிட்டியில் இன்று (12) மாலை இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில், அமைச்சர்களான றிஷாத் பதியுதீன், அகில விரஜ் காரியவசம் ஆகியோர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்த போது, இது தொடர்பில் அந்த பிரதேசங்களில் மேலும் பாதுகாப்பை அதிகரித்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இரவு இடம்பெற்ற விஷேட அமைச்சரவை கூட்டத்தின் போதே, இந்த பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் அட்டகாசங்கள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு இவ்விரு அமைச்சர்களும் கொண்டுவந்தனர்.

சிலாபம் மற்றும் குளியாப்பிட்டி பிரதேசங்களில் வேண்டுமென்றே வன்முறைகளை தூண்டி முஸ்லிம்களின் கடைகளும் பள்ளிவாசல்களும் அடித்து நொறுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இதனால் அந்த பிரதேச முஸ்லிம் மக்கள் தற்போது பயத்தில் உறைந்து கிடப்பதாகவும் ஜனாதிபதியிடம் இவ்விரு அமைச்சர்களும் சுட்டிக்காட்டினர்.

இதனையடுத்து ஜனாதிபதி பொலிஸ்மா அதிபருடன் தொடர்புகொண்டு நிலைமைகளை கேட்டறிந்ததுடன் சட்டத்தையும் ஒழுங்கையும் இறுக்கமாக நிலை நாட்டுமாறும் சட்டத்தை பணிப்புரை விடுத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாட்டில் எந்த பிரதேசங்களிலும் ஏதவாது சம்பவங்கள் நடந்தால் அதற்கு பிரதி பொலிஸ் மா அதிபரும் அந்தந்த பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுமே வகை சொல்ல வேண்டும் எனவும் இது தொடர்பில் உரிய அறிவுறுத்தல்களை பொலிஸ் அதிகாரிகளுக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடுத்துரைத்தார்.

இதேவேளை குளியாப்பிட்டிய, பிங்கிரிய, தும்மலசூரிய பொலிஸ் பிரிவுகளில் வன்முறையாளர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப்பிரிவு

Mon, 05/13/2019 - 13:50


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக