இந்தியாவுடனான தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்போம்

உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்றதில்லை என்ற வரலாற்றை இம்முறை மாற்றி எழுதுவோம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய தேர்வுக் குழுவின் தலைவருமான இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இம்முறை உலகக் கிண்ணத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியைத் தான் இரு அணி ரசிகர்களும் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வார்கள். உலகக் கிண்ணம் போன்ற தொடரைக் காட்டிலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றாலே போதுமானது என்று நினைக்கும் அளவுக்கு இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதுவரை நடைபெற்றுள்ள உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி, இந்திய அணியை வென்றதில்லை. சுமார் ஆறு உலகக் கிண்ணத் தொடர்களில் இந்த சோதனை பாகிஸ்தான் அணியை பின்தொடர்ந்து வருகிறது.

தற்போது பாகிஸ்தான் அணி படுமோசமான நிலைமையில் இருக்கிறது. கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் தோல்வி கண்டது. மேலும், பயிற்சிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடமும் தோல்வியைத் தழுவியது. எனவே, பாகிஸ்தான் அணி இம்முறை உலகக் கிண்ணத்தில் அரையிறுதிக்குத் தகுதி பெறாவிட்டாலும், இந்திய அணியை வீழ்த்தி விட வேண்டும் என்ற கங்கனத்துடன் இந்தியாவை சந்திக்கவுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியுடனான தோல்வி குறித்து இன்சமாம் கருத்து வெளியிடுகையில், உலகக் கிண்ணப் போட்டிகளைப் பொறுத்தவரை சிறிய அணிகள், பெரிய அணிகள் என எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. இம்முறை உலகக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தான் அணியும் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கலாம்.

ஆப்கானிஸ்தான் வென்றாலும், இங்கிலாந்தை வென்றாலும் கிடைப்பது 2 புள்ளிகள் தான். ஆனால் எந்த அளவுக்குப் போட்டியில் நெருக்கடி கொடுத்து வெற்றி பெறுவது என்பதுதான் இங்கு முக்கியமாக உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியுடனான பயிற்சிப் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், உலகக் கிண்ணப் போட்டிகளை வெற்றியுடன் ஆரம்பிப்பதற்கு எமது வீரர்கள் தயாராக உள்ளனர்.

அதிலும் முதல் போட்டியில் வெற்றிபெறுவதென்பது மிகவுத் முக்கியம். அந்த வெற்றியைப் பெறுவதற்கு எமது அணி தயார்நிலையில் உள்ளது. அத்துடன், எனது கணிப்பின்படி இம்முறை உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதிபெறும் என அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண லீக் ஆட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி மென்செஸ்டரில் நடைபெறவுள்ளது.

Tue, 05/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை