பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பொறிமுறை அவசியம்

பாதுகாப்பு அமைச்சை கையளித்தால் செயற்பாடுகளை முன்னெடுப்பேன்

கோட்டாபய மீதான குற்றச்சாட்டை ஏற்கமாட்டேன்

பயங்கரவாதிகளின் பின்னால் ஓடி பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது. அதற்கென உபாயமார்கமொன்று அல்லது பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும். பாதுகாப்பு அமைச்சை என்னிடம் கையளித்தால் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுப்பேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்துடன், பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பை உருவாக்கியதன் பின்புலத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் இருந்துள்ளதாகவும், இத்தாக்குதலுக்கும் அவருக்கும் தொடர்புள்ளதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தீவிரவாதக் குழுக்கள் நீண்டகாலமாக கட்டமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களிடம் ஆசியை பெற்றுக்கொள்வதற்காக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நேற்றுமுன்தினம் மாலை அங்கு விஜயம் செய்திருந்தார். இதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்ததுடன், அவர் மேலும் கூறியதாவது,

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது கட்டாயமானதாகும். நாம் யுத்தம் செய்திருந்த தருணத்தில் பாதுகாப்புத் தொடர்பில் ஒரு பொறிமுறையை கையாண்டிருந்தோம். பயங்கரவாதிகளின் பின்னால் ஓடி பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது. ஆகவே, பயங்கரவாதத்தை ஒழித்துகட்ட ஒரு உபாயமார்கம் அல்லது பொறிமுறையொன்று அவசியமாகும். அதன் அடிப்படையிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். பாதுகாப்பு அமைச்சை என்னிடம் கையளித்தால் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன். இதேவேளை, பங்கரவாதத் தாக்குதல்களின் பின்புலத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இருந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் அதனை நம்பவில்லை. ஒரு தீவிரவாதக் குழு உருவாக பல ஆண்டுகள் செல்லும். சாதாரணமாக இவ்வாறு செய்துவிட முடியாது என்றார்.

 சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Fri, 05/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை