பொருளாதாரத்துக்கு பாரிய இழப்பு இல்லை

ஈஸ்டர் தாக்குதல் காரணமாக நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என அநேகமானோர் கவலையடைந்தார்கள். நாம் இது தொடர்பாக மிகவும் அவதானத்துடன் இருந்தோம். ஆனால் எமது பொருளாதாரத்துக்கு அவ்வாறான பாரிய இழப்பு ஏற்படவில்லையென அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் தற்போது மக்களின் வாழ்வும், பொருளாதாரமும் சாதாரண நிலைமைக்கு திரும்பியுள்ளன. தற்போது செய்ய வேண்டியதெல்லாம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதாகும் என்றார்.  

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்தாலும் அம்முயற்சிகள் அனைத்தையும் தோல்வியடையச் செய்து அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல அனைத்து பாராளுமன்ற, மாகாண மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார். 

அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்: ஏப்ரல் 21ஆம் திகதியிலிருந்து இதுவரை நாம் எடுத்த முடிவுகளால் ஒரு மாதத்திற்குள் ஐ. எஸ். ஐ. எஸ். தீவிரவாதிகளை பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்ய முடிந்துள்ளது. இவ்வாறு குறுகிய காலத்தில் ஐ. எஸ். ஐ. எஸ். தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டது உலகிலேயே ஒரு சில சந்தர்ப்பங்களில் மாத்திரம்தான். 

பாடசாலைகள் நடைபெறுவதை தடுக்க சிலர் முயற்சி செய்தாலும் தற்போது பாடசாலைகள் வழமைபோல் இயங்குகின்றன. அது போல் முஸ்லிம், கத்தோலிக்க மதஸ்தலங்களில் வழமைபோல் வழிபாடுகள் இடம்பெறுகின்றன. வெசாக் கொண்டாட்டங்களும் விஹாரைகளில் மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. தற்போது நாட்டில் நிலைமை சீராகியுள்ளது. ஆகவே நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பொருளாதாரத்தில் சில பிரிவுகளில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. அதற்கு அநேகமாக நாட்டில் அடிக்கடி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதும் ஏற்பட்ட கலவரங்களாலும் மக்கள் தமது இயல்பு வாழ்க்கையிலிருந்து விலகியிருந்தார்கள். இதன் காரணமாக வர்த்தக சந்தையின் கொடுக்கல், வாங்கல் மற்றும் விற்பனை வீழ்ச்சி அடைந்தது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களில் சாதாரண நிலைமைக்கு மெல்ல மெல்ல திரும்பியுள்ளன. 

இக்காலப் பகுதியில் சில வர்த்தகர்களுக்கு தங்களது கடனை செலுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டது. அதனால் அவர்களுக்கு குறுகிய கால சலுகைகளை வழங்க நாம் வங்கிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஈஸ்டர் தாக்குதல் காரணமாக ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்படவில்லை. உற்பத்தித்துறைகள் தமது நடவடிக்கைகளை வழமைபோல் நடத்தி வருகின்றன. 

இத் தாக்குதலினால் பெருமளவு பாதிப்படைந்தது சுற்றலாதுறையாகும். பல வெளிநாடுகள் இலங்கைக்கு சுற்றுலா செல்வதற்கு தமது மக்களுக்கு தடைகளை விதித்திருந்தன. தற்போது இந்தியா, சீனா, சுவிற்சர்லாந்து போன்ற நாடுகள் அத்தடையை நீக்கியுள்ளன. மேலும் சில நாடுகள் இலங்கைக்கு பயணம் செய்வதில் சில ஒழுங்கு விதிகளை வித்து தடையை நீக்கியுள்ளன. 

Thu, 05/30/2019 - 09:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை